நெட்டிசன்:
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் மறைந்த முதல்வர் ஜெயலிதாவுக்கு நோபல் பரிசு கொடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, காலியாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை நியமிக்க அவரது ஆதரவாளர்கள் முயற்சி செய்து வந்தனர். அதிமுக தொண்டர்க ளுக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் சசிகலாவின் ஆணைக்கிணங்க, அவரை பொதுச்செயலாளராக தேர்வு தீர்மானம் நிறைவேற்றினர்.
இன்று அதிமுக பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒருசில தீர்மானங்களில் நாட்டில் உள்ள அனைத்து விருதுகளையும் ஜெயலலிதாவுக்கு வழங்க கோரி தீர்மானத்தில் எழுதப்பட்டிருந்தது.
அதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் நோபல் பரிசு பெறுவதற்கான விதிமுறைகளில் இறந்த ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட மாட்டாது என்ற விதியே உள்ளது.
1974-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மறைந்த ஒருவரின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை. ஒரு வேளை, நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படுவதற்கு முன்பே, அவர் இறந்துவிட்டால் மட்டுமே, அந்த பரிசு அவரது பெயரில் வழங்கப்படும்.
ஆனால், எந்த வகையிலும், உயிரோடு இல்லாத ஒருவரது பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் படாது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
இந்த விதிகள் எதுவும் தெரியாமல் அதிமுகவினர் பொதுக்குழுவில் ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்
மா.பாண்டியராஜன், பொன்னையன்  போன்ற அறிவுஜீவிகள் நிறைந்த அதிமுகவில் இதுகூடவா தெரியாது என்று சமூக வலைதளங்களிலும், முகநூலிலும் கலாயத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.