சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ஜப்பான் நிறுவனம். ரூ.1500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் காரணமாக விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பாணை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அதற்காக ரூ.1,264 கோடி மதிப்பிடப்பட்டது. மேலும்,  சுமார் 201.75 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டது. இங்கு 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 45 மாதங்களில் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இயக்குனர்களும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டனர். இதனால் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டு வரும் என நம்பப்பட்டது.  மேலும்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டுமே ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் மூலம் கடன் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்து போனது. கடந்த 3 ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம்  கடன் கேட்டுள்ளதாகவும், ஜப்பான் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும், நிதி ஒதுக்கவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது.  ஜப்பான் நிறுவனம் பதில் கூறாததால், கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் உலக பொருளாதாரம் முடங்கியது. இதனால் நிதி உதவி பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடர்பாக மத்தியஅரசுக்கு அழுத்தம் தரப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு திமுக எம்.பி.க்கள் எழுப்பிய  கேள்விக்கு பாராளுமன்றத்தில் மத்தியஅரசு அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கடன் திட்டத்தை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA)  அங்கீகரித்துள்ளது என்றும், அதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும் என்றும் கூறியது. தொடர்ந்து  2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்காக  கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த விவகாரம்,  கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக  சட்டப்பேரவை தேர்தலின் போது எதிரொலித்தது.. அதைத்தொடர்ந்து, மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என  மக்களவையில் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் கேள்வி எழுபபப்டது.  அதற்கு பதில் கூறிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் , தமிழ்நாட்டின் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-20 ஆம் ஆண்டு ரூ.3.12 கோடியும் 2020-21 ஆம் ஆண்டு ரூ.4.23 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ்க்கு இதுவரை 12.35 கோடி ரூபாய் மட்டுமே நிதி வழங்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி 3  ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் இன்னும் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையே நீடிப்பதும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், தற்போது மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பான் நிறுவனமான ஜைக்கா ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி,  மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியது இருப்பதாக  ஜப்பான் நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ்  மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான மொத்த திட்ட மதிப்பீடு  ரூ.1977 கோடி என கணிக்கப்பட்டு உள்ளது. இதில் ஜப்பான் நிறுவனமான  ஜைக்கா நிறுவனம் மட்டும் ரூபாய் 1500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் எய்ம்ஸ் கட்டப்பட உள்ள நிலையில் மீதி நிதியை மத்திய, மாநில அரசுகள் அக்டோபர் 26ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.