ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். யாத்ரீகர்கள் பஹல்காம் அடிப்படை முகாமுக்கு அப்பால் பிர் பஞ்சால் மலைகளில் உள்ள குகையை நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க லடசக்கணக்கான பக்தர்கள் செல்வது வாடிக்கை. ஆனால், கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த வருடம் அமர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து, முன்பதிவு செய்யப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் ஜூன் 30-ந்தேதி முதல் பனிலிங்க யாத்திரை மீண்டும் தொடங்கியது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசித்து வருகின்றனர். இதுவரை 65ஆயிரம் பேர் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்.  இந்த யாத்திரை ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி வரை  நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பக்தர்கள் யாரும் யாத்திரை செல்லமுயற்சி செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.