மிருக வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டுவிற்கு விதிவிலக்கு அளித்து தமிழக அரசு மத்திய அரசின் ஆதரவோடு, மத்திய உள் துறையின் பரிந்துரையோடு, குடியரசுத் தலைவரின் அனுமதியோடு ஆளுநரின் கையோப்பமிட்ட அவசரச் சட்டம் கொண்டு வந்திருப்பதாக முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று வாடிவாசல் திறக்கப்பட்டுக் காளைகள் துள்ளிப் பாயும் என்றிருக்கிறார், வரும் சட்டமன்றக் கூட்டத்திலேயே சட்டத் திருத்த முன் வரைவு அறிமுகப்படுத்தப்பட்டு நிரைவேற்றப்படுத்த சட்டமாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து சில சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன.

1. அரசியல் சாசன விதிமுறைகளுக்கு உட்பட்டு மாநில அரசின் உரிமையின் அடிப்படையில் அவசரச் சட்டம் கொண்டு வருவதானால், உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஒரு வார காலத்திற்கு எந்தத் தீர்ப்பும் வழங்க வேண்டாம் என மத்திய அரசு வேண்டுகோள் வைத்தது ஏன் ? சட்ட ஓட்டைகள் உண்டு அதனைப் பயன்படுத்தி அவசரச் சட்டத்திற்கு தடை வாங்க வாய்ப்பு உண்டு என்ற அச்சத்தினாலா?

2. தமிழ் சமுதாயத்தின் எழுச்சியினால் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டிய நிர்பந்தத்தால், ஜல்லிக்கட்டு விஷயத்தில் ஒரு வாரகாலம் தீர்ப்பு வழங்க வேண்டாம் எனக் கோரிக்கை விட்டுள்ள மத்திய அரசு, இது சம்பந்தமான வழக்கில் பொங்கல் பண்டிகைகு முன்பே தீர்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்காதது ஏன் ? தமிழ் மக்களின் கலாசாரப் பற்றினைக் குறித்து மத்திய அரசிற்கு சரியானப் புரிதல் இல்லையா ? தமிழன் என்னக் கிள்ளுக்கீரையா இல்லை ஒன்றும் அறியா உணர்வில்லா ஜடம் என எடை போட்டிருந்தார்களா?

3. சரி, முன்னெச்சரிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்கள் என்றே வைத்துக் கொண்டாலும், ஒரு அவசர சட்டத்திற்கு 6 மாத காலம் உயிர் இருக்கும் போது, அவசர அவசரமாக அவசரச் சட்டம் பிறப்பித்த மறு நாளே ஜல்லிக்கட்டை மக்கள் எதிர்பையும் மீறி நடத்தத் துணிவதன் காரணமென்ன ? தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் செல்லாமல் போகிவிடுமோ என்ற அச்சமா, அப்படியென்றால் பலமில்லா அவசரச் சட்டத்தைப் பிறப்பித்ததேன் ? யாரை ஏமாற்ற இந்த முயற்சி, எதற்காக இந்த அறப் போராட்டத்தை முறியடிக்க பிரித்தாள முயற்சி ?

4. இப்போது கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை ஏன் முன்னமே கொண்டு வர மத்திய அரசு மாநில அரசுக்கு ஆலோசனை கூறவில்லை ?

5. பாஜக வின் மத்திய அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு கட்டாயம் நடக்கும் என வாக்குறுதிகள் கொடுத்த வண்ணம் இருந்து பின்னர் நடக்கச் சாத்தியமில்லை என்ற போது மன்னிப்புக் கோரினார்களே, எதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடக்கும் என வாக்குறுதி கொடுத்தார்கள் என்பதை விளக்குவார்களா? மத்திய அரசின் சட்டத்தை மத்திய அரசு ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் மாற்றுவதை விடுத்து மாநில அரசை சட்டத்தின் முன் பலியாடாக்க பாஜக அரசு ஏன் முனைகிறது ?

6.மத்திய சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள ஒரு விஷயத்தில் குடியரசு தலைவரின் அனுமதியைப் பெற்று சட்டத் திருத்தமோ, அவசரச் சட்டமோ கொண்டு வரலாம் என்ற அடிப்படையில் இந்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஆனால், மிருக வதை தடுப்புச் சட்டம் இந்தியா முழுமைக்குமான மத்திய அரசு விதித்த சட்டம். இப்படி, மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் மாநில அரசு எப்படி திருத்தம் செய்ய முடியும் என்பதே முதலில் புரியவில்லை..! அரசியல் சாசனப்படி மாநில சட்டம் மத்திய சட்டத்திற்கு விரோதமாக இருந்தால் மத்திய அரசின் சட்டமே செல்லுபடியாகும் என்பது தான் நடைமுறை, பல வழக்குகளில் இந்த நிலைப்பட்டையே நீதிமன்றங்கள் எடுத்துள்ளன என்பது நினைவு கூறத்தக்கது

7. ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 2014-ல் அளித்த தீர்ப்பில் பீட்டா அமைப்பையும், விலங்குகள் நல வாரியத்தையும் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு எந்த முடிவையும் எடு்கக முடியாது.. கூடாது என்று குறிப்பிட்டே ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தடை விதித்தது..! இதே போன்ற தடை மஹாராஷ்டிரா, இராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் ரேக்ளா போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய மாநில அரசுகள் இவர்களை ஆலோசித்தார்களா, இல்லையா, விளக்கம் வேண்டும்.

8. தற்போது மத்திய மாநில அரசுகள் சட்ட நிபுணர்களை மட்டுமே ஆலோசித்து இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள் என்றே தெரிகிறது. பீட்டாவிடம் இவர்கள் கேட்டிருக்கவே முடியாது. விலங்குகள் நல வாரியத்தின் தலைவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டார். அவரிடத்திலும் கருத்து கேட்டிருக்க வாய்ப்பே இல்லை..! ஆக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய மாநில அரசுகள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் ஆலோசனையைக் கேட்காமலேயே மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஆதரவளித்துள்ளது.

9. முன்னதாக காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளை நீக்கப்பட்டதாக மத்திய அரசின் சுற்றறிக்கை குறித்த வழக்கில் இடைக்கால தடி விதிக்கப்பட்டு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு இன்னமும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழ் சமுதாயத்தின் ஏகோபித்த எழுச்சி ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தால் அரசியல் காரணங்களால் மக்களை திருப்திப் படுத்த இப்போது அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டம் மறுபடியும் உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்குள் வந்தால் செல்லாது என நிராகரிக்கப்படவே சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கிறது..! த

மிழ் சமுதாயம் மற்றொரு அரசியல் சதுரங்கக் கண்ணாமூச்சி விளையாட்டில் ஏமாந்து விடக் கூடாது…ஏமாறவும் மாட்டார்கள்…

வெல்க ஜனவரி புரட்சி