சென்னை:

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். ஜெகத்ரட்சகன் பாஜகவுக்கு செல்லவுள்ளதாக கடந்த வாரம் தகவல் பரவிய நிலையில் அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இதனைக் கூறியுள்ளார்.

திமுகவில் தனக்கு எந்த அதிருப்தியும் கிடையாது என அரக்கோணம் மக்களவை தொகுதி உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரை தாம் சந்திக்கவில்லை என்றும் தன்னை பற்றி சமூகவலைதளங்களில் வரும் வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது எனவும் ஜெகத்ரட்சகன் கூறியிருக்கிறார். கு.க.செல்வத்தை தொடர்ந்து ஜெகத் பாஜகவுக்கு தாவ உள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஜெகத்ரட்சகனுக்கு மருத்துவமனை, கல்லூரி உட்பட பல தொழில்நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு சிலவற்றில் சிக்கல் எழுந்துள்ளதால் அவர் பாஜகவில் ஐக்கியமாகிவிட முடிவெடுத்துவிட்டார் என தகவல் பரவின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பாஜக தரப்பில் இருந்தும் பூடகமாக சில பேட்டிகள் கொடுக்கப்பட்டன. திமுகவில் இருந்து இன்னும் பலர் பாஜகவுக்கு வருவார்கள் என அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்

ஜெகத்ரட்சகனை பொறுத்தவரை ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர். திமுகவில் இருந்தாலும் கூட கோயில் குடமுழுக்கு, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தாராளமாக நிதி கொடுக்கக்கூடியவர். மேலும், தமிழ் மொழி மீது அளவுகடந்த நேசம் கொண்டவர். கருணாநிதியை மேடையில் அமரவைத்து தமிழுடன் விளையாடி தங்கு தடையின்றி இவர் பாடிய வாழ்த்துப் பாக்களை இன்றும் யூடியூப்களில் காண முடியும்.

ஏற்கனவே இதேபோன்று திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அதில் திமுகவை விட்டு தன்னை யாராலும் பிரிக்க முடியாது என்றும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் எச்சரித்திருந்தார். தற்போது ஜெகத்ரட்சகனும் அதேபோன்று ஒரு விளக்கத்தை செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.