2 வெளிநாட்டு செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்

ஐதராபாத்:

2 வெளிநாட்டு செயற்கை கோள்களுடன் இந்தியாவில் பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இதில் இங்கிலாந்துக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை.

நோவாசர் 445 கிலோ, எஸ்1-4 444 கிலோ எடை கொண்டவை. விண்ணில் செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் 2 செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட். இதற்கான இறுதிக்கட்ட 33 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று பகல் 1 மணி 8 நிமிடத்தில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ISRO launches PSLV-C42 into orbit carrying two foreign satellites