53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற்றது.

இந்த திரைப்பட விழாவில் விவேக் அக்னிகோத்ரி எழுதி இயக்கிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் நவம்பர் 22 ம் தேதி திரையிடப்பட்டது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்தப் படம் காஷ்மீரில் இருந்து இந்துக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அவர்கள் மீது இனப்படுகொலை நடத்தப்பட்டதாகவும் காண்பிக்கப்பட்டது இது நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறித்து நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் திரைப்பட தேர்வு குழு தலைவரும் இஸ்ரேலிய திரைப்பட கதாசிரியருமான நாடவ் லேபிட் பேசினார்.

“மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப் போட்டிப் பிரிவில், ஒரு அசிங்கமான அருவருக்கத்தக்க கதையம்சத்துடன் கூடிய ஒரு திரைப்படத்தை பிரச்சார ரீதியாக திரையிட்டது வேதனைக்குரியது” என்று தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து நாடவ் லேபிட் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த விழாவில் மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல். முருகன் மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாடவ் லேபிட் கருத்துக்கு ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தில் நடித்திருந்த அனுபம் கெர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார், “ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது நியாயம் என்றால் காஷ்மீர் இந்துக்கள் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்டது சரி என்று நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று யூதரான நாடவ் லேபிட் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து நாடவ் லேபிட் கருத்துக்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், இதுபோன்று பேசியதற்கு நாடவ் லேபிட் வெட்கப்பட வேண்டும் என்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“இந்திய கலாச்சாரத்தில் விருந்தினர் கடவுள் போன்றவர் என்று கூறுகிறார்கள். இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட தேர்வு குழுவின் தலைவராக இருப்பதற்கான இந்திய அழைப்பையும், அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பான விருந்தோம்பலையும் நீங்கள் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள்” என்று கிலோன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.