அரசு கேபிளின் அடிமைகளா காட்சி ஊடகங்கள்..? : சிறப்புக்கட்டுரை

கட்டுரையாளர்: சாவித்திரி கண்ணன்

மிழகத்தில் பேச்சு சுதந்திரம்,எழுத்து சுதந்திரம்,கருத்து சுதந்திரம்…என ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது.

புதிய தலைமுறை தொலைகாட்சி மீதும் செய்தியாளர்கள் மீதும் வழக்குப்பதிவு ஏன்?

ஒரு விவாத நிகழ்ச்சி. அதில் மத்திய, மாநில ஆட்சி மீதான கடும் விமர்சனங்கள். அதில் பா.ஜ.கவினர் ஆவேசமாயினர். கூட்டமாக ரகளையில் ஈடுபட்டனர். இதில் நிகழ்ச்சியை நடத்திய ஊடகத்தின் மீதும், மாற்றுக் கரூத்துகளை வலுவாக வைத்த திரைப்பட இயக்குநர் அமீர் மீதும் வழக்குகள்! அதாவது, கலவரக்காரர்களுக்கு ஆதரவு: கடமையைச் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு.

அங்கு நடந்த நிகழ்வுகள் கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதை ஒளிபரப்பினால் உண்மை நிலவரம் தெரிய வரும்.ஆனால்,அதை ஓளிபரப்பமுடியாமல் – குறைந்தபட்சம் தங்களை தற்காத்து கொள்ளும் உரிமைக்காக கூட – வெளிப்படுத்த முடியாமல் ஒரு மீடியா ஏன் முடங்கிப் போனது?

அவர்களை முடக்கிய கரங்கள் அரசு கேபிள் டி.வி நெட் வொர்க் நிறுவனம்.

அரசு  கேபிள் நெட்வொர்க் தயவில் தான் இன்று தமிழகத்தின் அத்தனை தொலைகாட்சி சேனல்களும் மக்கள் வீடுகளுக்கு செல்லமுடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டதன் விளைவே இது!

இந்த நிகழ்வின் மற்றொரு எதிர்வினை அரசு கேபிள் ஒளிப்பரப்பில் யாரும் எளிதில் பார்க்கமுடியாத வகையில் தற்போது புதிய தலைமுறையை 499வது இடத்துக்கு போட்டுவிட்டார்கள். அதாவது தமிழ்சேனல்களின் வரிசையிலே கூட அது இல்லை.

அரசை விமர்சிக்கும் கருத்துகளுக்கு இடமளித்தால் ஒரு பக்கம் வழக்குகள் பாயும். மறுபக்கம் சேனல் இருட்டடிப்பு செய்யப்படும். இது புதிய தலைமுறை மட்டுமல்ல, அனைத்து சேனல்களும் அவ்வப்போது சந்திக்கும் அவலங்களே!

அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒளிப்பரப்பினால் பல நேரங்களில் ஒளிபரப்பிலிருந்தே ஓட்டுமொத்தமாக சேனலை தூக்கி விடுவதும் நடந்துள்ளது. அல்லது சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 பிரதான இடங்களில் மட்டும் இருட்டிப்பு செய்யப்படும்.

இந்த மாதிரி நேரங்களில் சேனல்கள் விளக்கமோ, நியாயமோ கேட்கவே முடியாது. அவர்களுக்கிருக்கும் ஓரே வழி மண்டியிட்டு மன்னிப்பு கேட்பது ஒன்றே. சில நேரங்களில் அதிகாரத்தில் உள்ளவர்கள், “இப்படி எத்தனை முறை தான் மன்னிப்பு…? போ, போ…!”  என எகிறுவார்கள். அப்போது மனமிரங்க வேண்டுமானல் பணம் இறக்க வேண்டும் என்பது சேனல் முதலாளிகளின் அணுகுமுறையாக உள்ளது!

தூத்துகுடி சம்பவங்களிலும் இது போன்றே பலவற்றை பதிவு செய்தும்  வெளியிடமுடியவில்லை!

இது மட்டுமல்ல, டெங்கு, பன்றிகாய்ச்சல் போன்ற பதிவுகளில் யாராவது குக்கிராமங்களில், சிற்றூர்களில் பலியானதைக் கூட ஒளிபரப்ப முடியாமல் பல நேரங்களில் தடுக்கப்பட்டுள்ளனர்.

“சட்டசபையில், “தமிழ்நாட்டில் எந்த பாதிப்புமில்லை…” என்று நாங்க பேசிக்கிட்டிருக்கோம். நீங்க, அப்படி எதுவும் இருந்தா…, போட்டு எங்கள சங்கடப்படுத்திடாதீங்க….” என்று  எச்சரிக்கைகள் பலநேரங்களில் தருகிறார்கள்!

ஒரு சில நேரங்களில் அப்படி ஒளிப்பரப்பானபோது உடனே சேனல் பல இடங்களில் தெரியாதபடி இருட்டிப்பு ஆகிவிடும். “சார் எங்க ஊர்ல தெரியமாட்டேங்குதே….” என்ற போன்கால்களே சேனல் முதலாளிகளை கலவரப்படுத்திவிடும்!

தேர்தல் காலங்களில் கேட்கவே வேண்டாம். எதிர்கட்சி பிரச்சாரங்களை அடக்கி வாசிக்கவேண்டும். ஆளும் கட்சிக்கு அதீத வெளிச்சம் பாய்ச்சவேண்டும்.

இந்த அநீதிகளுக்கெல்லாம் அடிப்படை, எம். எஸ்.ஓ. (m.s.o) எனப்படும் மல்டி சிஸ்டம் ஆப்பரேஷன் அரசு கையில்  இருப்பது தான்! இப்படி ஒரு நிலை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

டிராய் அமைப்பின்சட்டபடி, ஒரு அரசோ, அரசு சார்பு நிறுவனமோ, அரசியல் கட்சி சார்பு நிறுவனங்களோ எம்.எஸ்.ஓ. ஆக  இருக்கக்கூடாது.

கருணாநிதி

எனவே கருணாநிதி காலத்தில் அரசு கேபளை அவர் கொண்டு வந்த போதே டிராய் அனுமதிக்கவில்லை. குடும்ப பிரச்சினையில் மாறன் சகோதரர்களை மிரட்டுவதற்காக அரசு கேபிள் தொடங்கப்பட்டது. குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்ததும் அரசு கேபிளுக்கு மத்திய தொலைதொடர்பு துறை ஓழுங்குமுறை ஆணைய சட்டங்கள் இடம் தராததை சாக்காக வைத்து இழுத்து மூடிவிட்டார் கருணாநிதி!

ஜெயலலிதா

ஆனால், 2011 ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ஒரு அவசர சட்டத்தின் மூலம் அரசு கேபிள் நிறுவனத்தை புதுபித்தார். அந்த சமயம் தமிழ்நாட்டில் மல்டிசிஸ்டம் ஆபரேஷன்  (எம்.எஸ்.ஓ.) எனப்படும் சேனல் அலைவரிசைகளை ஓட்டுமொத்தமாக பெற்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு அனுப்பும் எம்.எஸ்.ஓக்களாக சுமார் 2,641 பேர் இருந்தனர். பலகோடி முதலீடுகள் செய்து தொழில் செய்துவந்த அவர்கள், ஆளும்கட்சியினரின் அராஜகத்தால் தொழிலில் இருந்தே அப்புறப் படுத்தப்பட்டனர். இன்றோ வெறும் 27 பேரே எஞ்சியுள்ளனர். இன்று கேபிள் நெட்வொர்கில் அரசு கேபிள் தனி ஆதிக்கவாதியாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் ஆதிக்க சக்தியாக திகழ்ந்து மற்றவர்களை அழித்து வளர்ந்த எஸ்.சி.வி எனப்படும் தயாநிதி மாறனின் சுமங்கலி கேபிள் விஷன் இன்று வெறும் 10 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டுள்ளது. (இது ஒரு வகையில் நல்லதாயிற்று.) அரசு கேபிள் நெட்வொர்க் தான் இன்று தனி ஆதிக்கம் கொண்டுள்ளது.

இதனால் தான் அரசுக்கு பிடிக்காத  கேப்டன் நியூஸ் சானல் கடைசி வரை இருட்டிப்பு செய்யப்பட்டு  அழிக்கப்பட்டது.

சன்நியூஸ், சத்யம் நியூஸ் உள்ளிட்ட பல செய்தி சேனல்கள் பல நேரங்களில் இருட்டிப்புக்கு உள்ளாகின்றன. அல்லது சில முக்கிய ஊர்களில் தடுக்கப்பட்டு விடுகின்றன.

மக்கள் பிரச்சினைகளை, பாதிப்புகளை, போராட்டங்களை செய்தி சேனல்கள் பதிவு செய்தாலும் மக்களிடம் பகிர முடியாத நிலை! இதனால் மக்களிடம் மீடியாவை பற்றிய மதிப்பீடு தரை மட்டமாகிவருகிறது. இது மீடியாக்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

“உங்களுக்கு ¨தைரியமில்ல, முதுகெலும்பில்லை.. எங்க பிரச்சினைகளை  சொல்ல துப்பில்லை…” என்று மக்களின்  வசை மொழிகளை அவ்வப்போது எதிர்கொள்வது களத்தில் இறங்கி பணிபுரியும் பத்திரிகையாளர்களே! காட்சி ஊடகங்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன! கருத்துச் சுதந்திரம் கபளிகரமாகியுள்ளது.

அரசு கேபிளின் அளப்பரிய ஊழல்கள், அபகரிக்கப்பட்ட தொழில் செய்யும் உரிமைகள், சட்டத்தை மீறிய அத்துமீறல்கள், சர்வாதிகார போக்குகள்… போன்றவற்றை குறித்து பல அத்தியாயங்கள் எழுதமுடியும்.  தமிழகத்தில் தொலைகாட்சி ஊடகங்கள் அரசு கேபிளிலிருந்து விடுவிக்கப்படுவது என்பது ஏதோ ஒரு தொழில் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டமல்ல, எதிர்கால அரசியல் போக்குகளை தீர்மானிக்க கூடிய முக்கிய விஷயமாகும். இந்த ஊடகங்கள் வழியாக மக்கள் குரல் வெளிப்பட அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் ஒன்றுபடவேண்டும்.

(கட்டுரையாளர், ‘சன் குழுமச் சதிகளும்,திமுக வின் திசை மாற்றமும்’,  ‘தமிழக அரசியலும்,அரசு கேபிள் தொழிலும்’ என்ற இரு நூல்களின் ஆசிரியர்.)

 
English Summary
Is visual media a slave to Govt Cable?: special article