சென்னை:

ஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்  மற்றும் பதிவாளர் மீது விஜிலன்ஸ் டிபார்ட்மென்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், துணைவேந்தராக க.பாஸ்கரன் மற்றும் பதிவாளராக ச.முத்துக்குமார்  பணியாற்றியபோது, கடந்த 2017ம் ஆண்டு, 10 பேராசிரியர்கள், 11 இணைப் பேராசிரியர்கள் என மொத்தம் 21 பேர், நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நியமனத்தில் விதிமீறல்கள் மற்றும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர் பாக பேராசிரியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.

இநத் வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், 2017ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டுள்ள 21 பேரும் தகுதியற்றவர்கள் என கூறியிருந்தனர். மேலும், இந்த நியமனம் தொடர்பாக,  முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் ச.முத்துக்குமார், முன்னாள் பதிவாளரின் நேர்முக உதவியாளர் ஜி.சக்தி சரவணன், தொலைநிலைக் கல்வி முன்னாள் இயக்குநர் என்.பாஸ்கரன் ஆகியோர் 4 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இந்த பேராசிரியர்கள் பணி நியமனத்துக்கு,  நேர்முகத் தேர்வுக்கு முன்பாக 10 பேரிடம் தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் பெற்றிருப்பதாக வழக்கு தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.