டில்லி:

டல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், சிகிச்சை பெற அனுமதி கோரி சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட  இடைக்கால ஜாமீன் மனுவை விசாரித்த  டில்லி உயர்நீதி மன்றம், எய்ம்ஸ் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்து நாளை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், உடல்நலக்குறைவை காரணம் காட்டி, 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று  ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வழங்கப்படும் உணவு அவருக்கு ஒத்துக்கொள்ளாததால், வயிற்றில் பிரச்சினை எழுந்துள்ளது.  பல முறை உடல்நலக் குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். மேலும், அவரது உடல் எடை 7.5 கிலோ குறைந்து பலவீனமாகி இருக்கிறார்.

இதனால், சிதம்பரம்,  ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற குறைந்த பட்சம் 3 நாட்கள் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி சி. ஹரிசங்கர் அமர்வு கூறியிருந்தது.

அதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், சிதம்பரம் வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட வேண்டும், அவர் ஐதராபாத் சென்று சிகிச்சை பெற குறைந்த பட்சம் 3 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அவரது உடல்நிலை கருத்தில்கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த டில்லி உயர்நீதிமன்றம், சிதம்பரத்துக்கு எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்றும், அப்போது அவரது குடும்ப மருத்துவரான நாகேஷ்வரராவ் ரெட்டியும்  இணைந்து சிகிச்சை அளிக்கலாம் என்றும், சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து நாளை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.