சென்னை: பா.ஜ.க.வில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை சஸ்பெண்ட் செய்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் – பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தர கட்சி தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு உள்ளார். இது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே உட்கட்சி பூசலில் சிக்கி உள்ள மாநில பாஜகவில், மேலும் பூசல் அதிகரித்துள்ளது, இதன் மூலம் அம்பலமாகி உள்ளது.

சென்னை: பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாவின் ஆடியோ என்று இணையத்தில் ஒரு ஆடியோ வைரலாகி வருகிறது. பாஜக நிர்வாகி டெய்சி சரணை கடுமையாக திட்டுவது போல இந்த ஆடியோ உள்ளது. இந்த ஆடியோவிற்கு பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவில் சமீபத்தில் இணைந்து ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் திருச்சி சூர்யா. திமுக எம்பி சிவாவின் மகனான இவர் திமுகவில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பின் திமுக நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்

இந்த நிலையில், ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா மற்றும் பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறி ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இருவரும் பேசியதாக கூறப்படும், அதிகாரபூர்வமற்ற ஆடியோ ஒன்று இணையத்தில் உலவி வருகிறது. அதன்படி, பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் தனது துறைக்கு கீழே கமிட்டி உருவாக்குவதற்கு திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காயத்ரி வைத்துள்ள விமர்சனத்தில், பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. பொது இடத்தில் அழுக்குத் துணிகளை துவைக்கிறோம் என்று சொல்கிறார்கள் செ & கோ ட்ரோல்ஸ். ஆனால் சில மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்களும், சில ஜல்ட்ரா ஆதரவாளர்களும் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு நம்மை ட்ரோல் செய்கிறார்கள்என்று விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில், காயத்ரி ரகுராமை 6 மாதம்  சஸ்பெண்டு செய்தும், திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம் தொடர்பாக  பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை தர கட்சி தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு உள்ளார்.

ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு, மூத்த தலைவர்கள் பலர் ஓரங்கட்டப்பட்ட விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பான கமலாயலத்திலும் மோதலும்  வெடித்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் மாற்று கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தவர்களுக்கு எந்தவொரு பொறுப்பும் வழங்காமல் அவர்களை மட்டம் தட்டி வருவதுடன், பாஜக என்றால் அண்ணாமலை என்ற ஒரு மாய பிம்பத்தை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. சமீபத்தில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் மாவட்ட பாஜக பந்த் அறிவித்த நிலையில், அதற்கு எதிரான மாநில தலைமை செயலாற்றியது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியதுடன், அண்ணாமலை கோவை சென்றபோது, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட முக்கிய நிர்வாகிகள் அவரை புறக்கணித்ததும், வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

இந்த நிலையில், தற்போது, காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா விவகாரத்திலும், பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சமடைந்துள்ளது என்பது அம்பலமாகி உள்ளது.