பெங்களூரு,

ந்தியாவில் சமீபகாலமாக ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக என்ஜினியரிங் படித்துவரும்  மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்தியஅமைச்சர்கள், ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு ஏதும் நடைபெற வில்லை என்று கூறியிருந்தனர்.

ஆனால், பிரபல இன்போசிஸ் ஐடி நிறுவன முன்னாள் தலைவர் நாராயணமூர்த்தி, ஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்புக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இளைஞர்களுக்கு அதிக வருமானம் அளிக்கும் துறையாக விளங்கி வருவது ஐடி துறை. ஆனால், அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்கு வந்தை தொடர்ந்து ஏற்பட்ட விசா மாற்றம், வெளிநாட்டு கொள்கைகளில் மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் ஐடி மற்றும் ஆட்டோமேஷன் துறைகள் தடுமாற்றம் அடைந்துள்ளது.   இதே நிலை தொடருமாயின் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வரும்  ஆயிரக்கணக்கான  ஊழியர்கள் வேலை இழப்பது உறுதி என ஐடி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஊழியர்களுக்கு   லே ஆஃப்   கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்ஃபோசிஸ் முன்னாள் தலைவர் நாராயண மூர்த்தி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இளநிலை ஊழியர்களை வேலையிலிருந்து எடுப்பது தவறு என்றும், அதற்குப் பதில் முதுநிலை ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

நாராயணமூர்த்தி, தமது கம்பெனியில், முன்பு 2001ல் இதே சூழ்நிலை ஏற்பட்ட போது, இளநிலை ஊழியர்களின் ஆட்குறைப்புக்குப் பதில் முதுநிலை ஊழியர்களின் ஊதியத்தைக் குறைத்ததாகவும், ஐடி துறையின் மற்ற பிரிவுகளில் இருக்கும் வாய்ப்பை கண்டறிவதன் மூலம் நிறுவனங்கள் வளர்ச்சி அடையலாம் எனவும்,  தமது நிறுவனம், 2001 மற்றும், 2008ல் இதே போல சூழ்நிலைகளை சந்தித்த போதிலும் அதிலிருந்து மீண்டு வந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

எக்காரணம் கொண்டும் இளநிலை ஊழியர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது எனவும் கூறி உள்ளார்.