சென்னை: தமிழ்நாட்டில் இன்புளுயன்சா எச்3என்2 வைரசினால் ஏற்படும் காய்ச்சல் அதிகரித்து வருவதால், அதுதொடர்பாக நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

தற்போது நாடு முழுவதும் பரவலாக வைரஸ் நோய்கள் பரவி வருகிறது. அதிகரித்து வரும் காய்ச்சலால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். சமீபகாலமாக இந்தியாவில் இன்புளுயன்சா எச்3என்2 வைரஸ் பரவி வரும் சூழலில்இந்த நோய் பரவல் தொடர்பாக மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே போதும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

‘இந்த நிலையில்,  இன்புளுயன்சா எனும் எச்3என்2 வைரஸ் நோய் பரவலால் கடந்த 3 மாதங்களில் மட்டும் நாட்டில் சுமார் 400-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் கர்நாடக மாநிலத்தில் ஒருவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் பாதிப்பு மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலும் கொரோனாவை போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுமோ? என்று மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

இந்த நிலையில்,  இன்புளூயன்சா  வைரஸ் நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த வகை வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும்.

பொது இடங்களுக்கு செல்வதையும், குடும்பத்தினரிடம் நெருக்கமாக இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

இருமல் நீர்த்துளிகள் காற்றில் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் எவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 அடுக்கு முகக்கவசம் அணிவது நல்லது. மருத்துவமனையில் இருப்பவர்களும், மருத்துவ ஊழியர்களும் அத்தகைய முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும்.

சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் பொதுமக்கள் இவ்வகை முகக்கவசத்தை அணிய அறிவுறுத்தப்படுகிறது.

மருத்துவ பணியில் ஈடுபடும் அனைவரும் இன்புளூயன்சா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

பரிசோதனை கூடங்களில் பணிபுரிவோர், மருத்துவம் சாரா பணியாளர்கள் பாதுகாப்பாக இதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தற்போது இலையுதிர் காலம் முடிந்து கோடை காலத்திற்குள் பிரவேசிக்க இருப்பதால் வெப்ப அலை பருவ நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முன்எச்சரிக்கை நட வடிக்கையை மேற்கொள்ள சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களையும் உஷார்படுத்தி உள்ளது.

வெப்ப அலை தாக்கத்தால் குழந்தைகள், சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். உடல் வெப்பம் தொடர்பான நோய் பாதிப்பு இந்த பருவகாலத்தில் ஏற்படக்கூடும் என்பதால் நீர் சத்து உள்ள உணவுகள், பழங்களை அதிகம் சேர்க்கவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.