இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் நீதிமன்றத்தில் இந்திய தூதரக உயர் அதிகாரியின் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த உஸ்மா என்ற பெண், பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக புகார் கூறினார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் அவர் அங்குள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

இந்த வழக்கு இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உஸ்மா சார்பில், இந்திய தூதரக அலுவலகத்தின் விசா மற்றும் தூதரக அதிகாரி பியூஸ் சிங் நீதிமன்றம் வந்தார். அங்கு பியூஸ் சிங்கின் போனை நீதிமன்ற ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

அப்போது பியூஸ் சிங் தான் செல்போனில் எஸ்.எம்.எஸ் மட்டுமே அனுப்பினேன். போட்டோ எடுக்கவில்லை என தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணை முடிந்த பின்னர் தான் செல்போன் திருப்பி கொடுக்கப்பட்டது. இதற்காக அபராதம் மற்றும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

பியூஸ் சிங் கோர்ட் நடவடிக்கைகளை வீடியோ எடுத்ததாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் பெரிய பிரச்னை ஏதுமில்லை. அவருக்கு விதிமுறை தெரியாததால் செல்போனை எடுத்து பயன்படுத்தினார் என பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.

குல்பூஷண் ஜாதவ் விவகாரம் மற்றும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த விவகாரம் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.