ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் நடப்பாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு  கடுமையான அரசியல் போட்டி நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையில், கேசிஆர் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, ஆட்சியையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகியாக ஷர்மிளாவின் பாத யாத்திரைக்கு தடை விதித்து, அவரை கைது செய்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து பேசிய ஷர்மிளா,  இந்தியாவின் ஆப்கானிஸ்தானாகாக  தெலங்கானா மாறி வருகிறது என்றும், கேசிஆர் ஒரு சர்வாதிகாரி என்றும் ஆவேசமாக கூறினார்.

நடப்பாண்டின் பிற்பாதியில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான்,மிசோரம், சத்தீஷ்கார் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது. இருப்பினும் 5 மாநிலங்களிலும் தேர்தல் ஒன்றாகவே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும், மத்தியபிரதேசத்தில் பாஜகவும், தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியும் மற்றும் மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சி செய்து வருகின்றன.

தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.. அதேவேளையில், தெலுங்கானா ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவின்  ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

தெலுங்கானா முதல்வர் கேசிஆரை ஷர்மிளா கடுமையாக விமர்சித்து வருகிறார். சிலதினங்களுக்கு முன்பு தலைநகர் ஐதராபாத்தில் உள்ள முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட, காரில் சென்ற ஒய்.எஸ்.ஷர்மிளாவை காரில் இருந்து இறங்க விடாமல், காவல்துறை யினர் அவரை, காரோடு சேர்த்த, இழுத்துச் சென்றனர். ,அதாவது, ஒய்.எஸ்.ஷர்மிளா காருக்கு உள்ளே இருக்கும் போதே, காரை கொக்கி போட்டு இழுத்துச் சென்றனர். இது, அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும், பாரத (தெலுங்கானா)  ராஷ்டிரிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஷர்மிளாவின் பிரசார வாகனத்தில் மீது கற்களை வீசி தீ வைத்தனர்.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி தெலுங்கானா மாநில அரசு மற்றும் காவல்துறை யினரின் நடவடிக்கையை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் ஒய்.எஸ்.விஜயலட்சுமி, மகள் ஒய்.எஸ்.ஷர்மிளாவை பார்க்க வீட்டில் இருந்து புறப்பட்டார். இதை அறிந்த போலீசார், அவரை வீட்டுக் காவலில் வைத்தனர் இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து ஷர்மிளா ரெட்டி, ‘கேசிஆர் கட்சி எங்களை அவமதித்துவிட்டது. எங்கள் தொண்டர்களை அவமானம் செய்துவிட்டது. தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். கேசிஆர் கட்சியின் குண்டர்களால் சேதப்படுத்தப்பட்ட எங்களது வாகனங்களை கொண்டு பேரணி நடத்த உள்ளோம். தெலங்கானாவில் ஜனநாயம் செத்துபோய் விட்டது’’ என்று கடுமையாக குற்றம் சாட்டியவர்,  முதல்வர் சந்திரசேகர ராவ்வுக்கு ஷூவை பரிசளித்து, தன்னுடன் பாதயாத்திரையில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகளை கேட்குமாறு  கூறினார்.

இதைத்தொர்ந்து,  கேசிஆர் அரசுக்கு எதிராக பாதயாத்திரை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். ஆனால், அவரது பாதயாத்திரைக்கு மாநில அரசு அனுமதி வழங்காத நிலையில், தடையை மீறி பாதயாத்திரை மேற்கொள்ள முயன்றார்.  இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், அவரது ஆதரவாளர்கள்,   ஷர்மிளாவை போலீசார் கைது செய்ததை கண்டித்தும், பாதயாத்திரைக்கு அனுமதி வழங்க கோரியும் அவரது கட்சி தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, பாதயாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஐதராபாத் ஐகோர்ட்டில் ஷர்மிளா வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டில் ஷர்மிளா பாதயாத்திரைக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்தனர். இருப்பினும் மாநில அரசு ஷர்மிளாவின் பாதயாத்திரைக்கு தடை விதித்து வந்தது.

இந்த நிலையில் மெகபூபாபாத் டோர்னகல் என்ற இடத்தில் ஷர்மிளா பாதயாத்திரை செல்ல  தயாராகி கொண்டு இருந்தார். அப்பகுதிக்கு ஏராளமான கட்சி தொண்டர்கள் வர தொடங்கியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். மெகபூபாபாத் எம்.எல்.ஏ. சங்கர் நாயக்கை ஷர்மிளா விமர்சனம் செய்து பேசியதாக அவர் மீது ஏற்கனவே போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். ஷர்மிளா பாதயாத்திரை செல்வதற்காக அங்கிருந்த பிரசார வாகனத்தில் ஏறினார்.

அப்போது அங்கு வந்த எஸ்.பி. சரத் சந்திர பகார் தலைமையிலான போலீசார் ஷர்மிளாவை கைது செய்து ஐதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் சிறை வைத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா ரெட்டி,  தெலுங்கானா மாநிலத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் செயல்படவில்லை. இங்கு கே.சி.ஆர். அரசியலமைப்பு தான் உள்ளது. தெலுங்கானா இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றவர், முதல்வர் சந்திரசேகரராவ் ஒரு சர்வாதிகாரி. கொடுங்கோலன் என கடுமையாக விமர்சித்தார்.

மேலும் அமைச்சர்  சங்கர் நாயக் என்னை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வந்ததால் அவருக்கு பதிலடி கொடுத்து பேசினேன் என்றவர், என்னுடைய பாதயாத்திரையை தடுக்க வேண்டும் என்பதற்காகவே ராஜதந்திரமாக காவல்துறையினர்  இவ்வாறு வழக்கு பதிவு செய்து பாதயாத்திரைக்கு தடை விதிக்கின்றனர். ஆனால், நான் மீண்டும் நீதிமன்றம் சென்று பாதயாத்திரைக்கு அனுமதி பெறுவேன் என்றார்.

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் சந்திரசேகராவ் அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை அறிவித்து வருகின்றன. இதனால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.