டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாகவும், அதிக பட்சமாக தமிழகத்தில் 43 மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், இந்திய மெடிக்கல் அசோசியேஷன் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே மருத்துவர்கள் உயிரிழப்பு விவகாரத்தில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்,  இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். ஆனால், தற்போது ஐஎம்ஏ, தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாக  பட்டியலிட்டு, சுகாதாரத் துறை அமைச்சரின் பொய்க்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள் இறப்பது தொடர்ந்து கொண்டே யிருக்கிறது. இது மருத்துவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர்கள் எத்தனை பேர்? அதில் அரசு மருத்துவர்கள் எத்தனை பேர்? தனியார் மருத்துவர்கள் எத்தனை பேர்? போன்ற விவரங்களை தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து உண்மையான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

தமிழக ஊடகங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வருகின்றன.  சில ஊடகங்களில் இதுவரை 43 மருத்துவர்கள் இறந்ததாகவும், சில ஊடங்களில் 30, 20 ஆளுக்கு ஆள் ஒவ்வொரு தகவலையும் வெளியிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்  வெளியிட்ட டிவிட்டுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள் எத்தனை பேர் என வெளிப்படையாக உண்மையான புள்ளிவிவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும்; உயிரிழந் தோர் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிட வேண்டும் எனக் குறிப்பிட்டு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாகவும், அதிகபட்சமாக சென்னையில் 43 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாகவும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான மருத்துவர்களின் இறப்பு குறைவு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்திய மருத்துவர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைச்சர் கூறுவது பொய் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.