கேரன்
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானின் நான்கு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இந்திய உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது அவ்வப்போது  தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் அத்துமீறலை நிறுத்தா விட்டால் தக்க பாடம் புகட்டுவோம் என இந்திய ராணுவம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தினரும், அவர்களுக்கு ஆதரவான பயங்கரவாதிகளும் அவ்வப்போது இந்திய நிலைகள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம்  இரவு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவிய பாகிஸ்தான்  ராணுவத்தினர் மற்றும் பயங்கரவாதிகள்  அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினர் மீது  துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.
பலியான ராணுவ வீரரின் உடலை இழுத்துச் சென்ற பயங்கரவாதிகள் ராணுவ வீரரின் உடலை துண்டுதுண்டாக வெட்டி சிதைத்துவிட்டு எல்லைப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இந்திய ராணுவத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்திய எல்லை கோட்டு பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் நேற்று அதிரடி தாக்குதலில் ஈடுப்பட்டனர்.
கேரன் பகுதியில் நீண்ட நேரம் நடைபெற்ற இத்தாக்குதலில், பாகிஸ்தானின் நான்கு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்நாட்டினருக்கு பலத்த உயிர்சேதம் எற்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.