முதல் டெஸ்ட் தொடர்: விராட் கோலி ஏமாற்றம் அளிக்க புஜாரா சதம் அடித்து அசத்தல்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களை எடுத்துள்ளது. முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்ப புஜாரா சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றிருக்கிறார்.

india

முதலில் தொடக்க வீரர்களாக ராகுலும், முரளி விஜயும் களமிறங்கினார்கள். ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 19 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ரஹானேவும் 13ரன்களில் வெளியேறினார்.

சொற்ப ரன்களில் 4 விக்கெட்டுகள் சரிந்த நிலையில் அடுத்ததாக ரோஹித் சர்மா களமிறங்கினார். உணவு இடைவேளியின் போது இந்தியா 27 ஓவர்களுக்கு 4விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ரோஹித் சர்மா 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற புராஜாவும், அஸ்வினும் ஜோடி சேர்ந்தனர்.

அஸ்வின் 25 ரன்களில் வெளியேறி, இஷாந்த் சர்மாவும் ஆட்டமிழக்க புஜாரா மட்டும் களத்தில் ஆட்டமிழக்காமல் நிதானமாக விளையாடினார். அடுத்து அவருடன் முகமது ஷமி இணை சேர்ந்தார். முன்னணி பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், புஜாரா பொறுப்புடன் விளையாடி தனது 16வது சதத்தை பதிவு செய்தார். 246 பந்துகளில் 123 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா வெளியேறினார்.

இதையடுத்து முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 87.5 ஓவர்களுக்கு 9 விக்கெட்டை இழந்து 250 ரன்களை சேர்த்திருந்தது. ஷமி 6 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார். இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டார்க், ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

இதையடுத்து 2வது நாள் ஆட்டம் நாளை காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-