டெல்லி: இந்தியா அகிம்சையின் கலங்கரை விளக்கம் (ஜோதி) ஆக உள்ளது,  இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டிற்கு தமிழ்நாடு முழு ஒத்துழைப்பை வழங்கும் என ஜி20 தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூறினார்.

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பிரகாலத் தோஷி, மற்றும்  முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மம்தா பானர்ஜி, ஏக்நாத் ஷிண்டே உள்பட 40 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில்,  ஜி-20 துணை மாநாட்டின் சாராம்சங்கள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பல தசாப்தங்களாக இந்தியா ஒரு தனித்துவமான மற்றும் நிலையான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளது மற்றும் அகிம்சையின் ஜோதியாக உள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் G20 ஜனாதிபதி பதவியானது, உலக தெற்கின் குரலாக நிற்கும் நமது முறை. நமது மாண்புமிகு பிரதமர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது
பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச புரிதலை மேம்படுத்துவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதோடு, பல்வேறு துறைகள் தொடர்பான G20 கூட்டங்களை நடத்துவதில் மத்திய அரசுக்கு தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்று உறுதியளித்தார்.

மேலும், காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள தமிழ்நாடு ‘பசுமை காலநிலை நிறுவனத்தை’ உருவாக்கி உள்ளோம். உலகளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களைக் காப்பாற்றத் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.

இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம். இந்தியா ஜி 20-க்கு தலைமை ஏற்றுள்ள நிலையில், தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும். அகிம்சை, நல்லிணக்கம், சமத்துவம் உள்ளிட்டவைகளை உலக அளவில் கொண்டு செல்ல இந்த வாய்ப்பினை பிரதமர் பயன்படுத்தி கொள்வார் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.