டில்லி:

மாலத்தீவு ஜனநாயக கட்சி தலைவரும், முன்னாள் அதிபருமான முகமது நசீத் (வயது 52) தனது ஆட்சியின் போது நீதிபதிகளை கைது செய்ய உத்தரவிட்டார். எதிர்க்கட்சி தலைவர்களையும் சிறையில் அடைத்ததால் கலவரம் வெடித்தது.

இதை தொடர்ந்து நஷீத் ஆட்சி கவிழக்கப்பட்டு, அவர் மீது பயங்கரவாத குற்றம் சுமத்தப்பட்டு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. துணை அதிபர் உள்பட நஷீத் ஆதரவாளர்கள் 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் இருந்து முகமது நஷீத் உள்பட அனைவரையும் விடுதலை செய்து மாலத்தீவு உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தலைநகர் மாலே பகுதியில் எதிர்கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்தது. உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவோம் என்று காவல் துறை தலைவர் தெரிவித்ததற்கு அதிபர் யாமீன் அப்துல் காயூம் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்தே இந்த வன்முறை வெடித்தது. முன்னாள் அதிபரை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அதிபர் யாமீன் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலிறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ மாலத்தீவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. அமைதியான, நிலையான, வளமான மாலத்தீவை காணவே இந்தியா விரும்புகிறது. மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.