டில்லி: அண்டை நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக செல்வதை இந்தியா அனுமதிக்க முடியாது என்று என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.

டில்லியில் நிருபர்களிடம் பிபின் ராவத் கூறுகையில், ‘‘நாட்டை யாரும் துண்டாட இந்தியா அனுமதிக்காது. சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால், இந்தியா பலவீனமான நாடல்ல. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை குறித்த பாதிப்பை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பாகிஸ்தான் எல்லை கண்காணிப்பில் இருந்து சீனாவின் எல்லை பக்கம் கண்காணிப்பை திருப்ப வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. சீன துருப்புகள் எல்லை கட்டுப்பாட்டை மீறி வருகின்றன. நேபாளம், பூட்டான், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்து வருகிறது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘சீனாவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதற்கு இது கட்டாயம். அண்டை நாடுகள் சீனாவிடம் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சில தெற்காசிய நாடுகளுடன் சீனா உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. அவர்களுக்கு பெரிய அளவில் நிதியுதவியையும் சீனா அளித்துள்ளது. மாலத்தீவு, இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளை சீனா தங்களது பக்கம் திருப்ப முயற்சி செய்வதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாடுகள் பாரம்பரியமாக இந்தியாவுடன் நட்புறவு கொண்ட நாடுகளாகும். ராணுவ மட்டத்தில் சீனாவிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதை உணரமுடிகிறது. இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். சூழ்நிலையை உற்று கவனித்து வருகிறோம். இதை கையாளக் கூடிய நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. வடக்கு டோக்லாம் பகுதியில் சீனா துருப்புகளை குவித்து வருகிறது. சீனாவுடன் இந்தியா தூதரக அளவிலான உறவுகளை கொண்டு வருகிறது. சீனா பல நாடுகளுடன் எல்லை பிரச்னை கொண்டுள்ளது. எனினும் சீனாவை எல்லை மீற அனுமதிக்கமாட்டோம்’’ என்றார்.