டெல்லி: 2024ஆம் ஆண்டுக்குள் சாலைகளின் தரம், பாதுகாப்பு மேம்படுத்தப்படுத்தி  50% சாலை விபத்துக்களை குறைக்க திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.

இந்தியத் தொழில்கூட்டமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கில் காணொளி காட்சி மூலம் பேசிய அமைச்சர் நிதின்கட்கரி, இந்தியாவில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நேர்வதாகவும், இவற்றில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் தெரிவித்தார்.பெரும்பாலான விபத்துக்கள்  சாலைப் பொறியியல் குறைபாடுகளாலேயே நேர்வதாகவும், அதிக விபத்துக்கள் நேரும் பகுதிகளை அடையாளம் கண்டு குறைபாடுகளைச் சரிசெய்ய அரசு செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பை மறுசீரமைப்பதன் மூலமும், பலப்படுத்துவதன் மூலமும் சாலை விபத்து இறப்புகளைக் குறைக்க தனது அமைச்சகம் கடுமையாக முயற்சிப்பதாக தெரிவித்தவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் சாலை விபத்து வழக்குகள் சுமார் 50 சதவீதம் குறையும் என்று  உறுதியளித்துள்ளார். சாலைகளின் தரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் 2024 க்கு முன்னர் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க தனது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு (MoRTH) இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சாலை பாதுகாப்பு – பொறியியல் (சாலை மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் உட்பட), பொருளாதாரம், அமலாக்கம் மற்றும் கல்வி ஆகிய நான்கு ‘எஸ்’க்களை மறுசீரமைத்து பலப்படுத்துவதன் மூலம் சாலை விபத்து இறப்புகளைக் குறைக்க தனது அமைச்சகம் கடுமையாக முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை இருப்பதாக கட்கரி கூறினார். இது குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் 2,000 ஓட்டுநர் பள்ளிகளைத் திட்டமிட அரசாங்கத்தைத் தூண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.