மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 639 விவசாயிகள் தற்கொலை….அதிர்ச்சி தகவல்

மும்பை:

கடந்த மார்ச் முதல் மே வரை விளைச்சல் குறைவு, கடன் உள்ளிட்ட காரணங்களால் 639 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

அம்மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே, தேசிய வாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பான கேள்விகழை எழுப்பினர். இதற்கு வருவாய் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாடீல் பதில் கூறுகையில்,‘‘கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் 639 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இவர்களில், 188 பேர் இழப்பீடு பெற தகுதியானவர்கள். இதில் 174 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 122 விவசாயிகள் இழப்பீடு பெற தகுதியற்றவர்கள். ஏனைய 329 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க விசாரணை நடக்கிறது” என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் முண்டே பிடிஐ நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான பயிர் இழப்பு காப்பீடு, பயிர்க்கடன், மற்றும் பயிர்களுக்கு குறைந்த பட்ச விலை உள்ளிட்ட அரசின் திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளன. 4 ஆண்டுகளில் 13 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு வருடத்தில் மட்டும் 1,500 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்” என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 639 farmers committed suicide in last march to may totally 3 months says government, In Maharashtra, மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் 639 விவசாயிகள் தற்கொலை....அதிர்ச்சி தகவல்
-=-