ரோம்

த்தாலியில் ஒரு கிராமத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க ரூ. 82க்கு ஒரு வீட்டை விற்க அரசு முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ளது இத்தாலி நாடு.  இங்குள்ள சார்டினியா என்னும் தீவில் அமைந்துள்ள ஒரு மலையோர கிராமம் ஓலோலாய் ஆகும்.    இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இங்கு வசிக்கும் மக்கள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக வெளியேறி உள்ளனர்.   தற்போது அந்த கிராமத்தில் சுமார் 1300 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.

தற்போது அந்த கிராமத்தில் பெரும்பாலும் வயதானவர்களே வசித்து வருகின்றனர்.   வசிப்பவர்கள் பலருக்கு குழந்தைகள் இல்லை.    குழந்தைகள் உள்ளவர்கள் தனியே இருக்க மனமின்றி தங்கள் குழந்தைகள் உள்ள இடத்துக்கு சென்று விடுகின்றனர்.    ஊரே காலியாவதை தடுக்க அந்த ஊர் தலைவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின் படி அங்குள்ள கவனிப்பாரற்றுள்ள வீடுகள் இத்தாலி மதிப்பில் 90 பென்ஸ்  (இந்திய மதிப்பில் ரூ.82) என விற்கப்படுகிறது.     வீடுகளை வாங்குவோர் 3 ஆண்டுகளில்  அந்த வீட்டை சரி செய்து குடியேற வேண்டும்.    அந்த  செலவு ரூ. 24 லட்சம் ஆகும்.    ஐந்து ஆண்டுகளுக்குப் பின் வாங்கியவர்கள் வேறு யாருக்காவது விற்பனை செய்துக் கொள்ளலாம்.

ஓலோலாய் கிராமத் தலைவர் எபிசோ அர்போ, “எங்கள் ஓலோலாய் கிராமத்தின் பாரம்பரியத்தை காத்து இங்கு மக்கள்  தொகையை அதிகரிப்பதே எனது முதல் கடமை.   இந்த நகரம் மரணமடவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.   இந்த திட்டத்தின் மூலம் பலரும் இங்கு திரும்புவார்கள்.   மீண்டும் ஒரு வலிமை மிக்க கிராமமாக எங்கள் ஓலோலாய் மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடுகளை வாங்க உலகெங்கும் இருந்து 120 விண்ணப்பங்கள் வந்துள்ளன.   மொத்தம் உள்ள 200 விடுகளில் இன்னும் 80 வீடுகள் பாக்கி உள்ளன.