புதுடெல்லி: உலகளவிலான தேர்தல்களில், ஒவ்வொரு தொகுதியிலும், கடந்தமுறை வெற்றிபெற்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதே உகந்தது எனும் நிலையிருக்கையில், இந்தியாவில் மட்டும் அதற்கு எதிரான போக்கு நிலவுகிறது.

உலகளவில், தேர்தல் அரசியலை உற்று நோக்கினால், ஒவ்வொரு குறிப்பிட்ட தொகுதியிலும், கடந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்களே மீண்டும் நிறுத்தப்படுவதுதான் அதிகம் என்பதை அறியலாம். ஏனெனில், பெயர் அங்கீகாரம், கட்சியின் பலம், நிதி ஆதாரம், கடந்த பதவி காலத்தில் செய்த பணிகள் போன்றவை பெரிய பலமாக இருக்கும்.

ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, குறைந்தளவிலான நபர்களே, தாங்கள் வெற்றிபெற்ற தொகுதியில் மீண்டும் நிற்கிறார்கள் அல்லது நிறுத்தப்படுகிறார்கள்.

இந்திய தேர்தல்களில், ஆட்சிக்கு எதிரான மனநிலை என்ற ஒரு விஷயம் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. ஒரு தொகுதியில் ஏற்கனவே வெற்றிபெற்ற வேட்பாளர், தானே தொகுதி மாறிவிடுவார் அல்லது கட்சி அவருக்கான வாய்ப்பை வழங்காது.

இந்திய தேர்தல்களில், ஜாதிரீதியான வாக்குகளை சமன் செய்வதென்பது ஒரு முக்கியமான அம்சமாக திகழ்கிறது. குறிப்பிட்ட சதவிகித நபர்களே, தேர்தலில், ஒரே தொகுதியில் தொடர்ந்து பலமுறை போட்டியிடுகிறார்கள்.

– மதுரை மாயாண்டி