17.5 கிலோமீட்டர் தொலைவுக்கு பேருந்து கட்டணம் ஒரு ரூபாய்தான்.  அதாவது சென்னையி்ல இருந்து மதுரைக்கு  (425 கி.மீ தூரத்துக்கு) வெறும் 24 ரூபாய்தான் ஆகும்.

நம்ப முடியவில்லையா?

அப்படி ஒரு பேருந்து ஓடுகிறது. ஆனால், இங்கல்ல..  மேற்குவங்கத்தில்.

ஆம், இம்மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில்.பீனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு குழுமம் என்ற தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம்  சாண எரிவாயுவைக் கொண்டு பேருந்து ஒன்றை இயக்கி வருகிறது.

உல்தங்காவிலிருந்து கரியா வரை   17.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த பேருந்து இயக்கப்படுகிறது. இதற்குக் கட்டணம் ஒரே ஒரு ரூபாய்தான்!

இப்பேருந்தை இயக்கும் பீனிக்ஸ் குழுமத்தின் தலைவர் ஜோதி பிரகாஷ் தாஸ் , “13 லட்சம் ரூபாய்க்கு 54 இருக்கைகள் உடைய இந்த பேருந்தை  வாங்கினோம். சாண எரிவாயுவைக் கொண்டு பேருந்தை இயக்குவதால் எரிபொருள் செலவு மிகவும் குறைவாகவே ஆகிறது. தவிர இதனால் பேருந்தின் தேய்மனமும் குறைவு என்பதால் பராமரிப்பு செலவும் குறைவாகவே ஆகும். தவிர எங்களுக்கு லாப நோக்கம் கிடையாது. அதனால்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றிச்செல்ல முடிகிறது” என்கிறார்.

இன்னும் 15 வழித்தடங்களில் இதே போன்ற ஒரு ரூபாய் பேருந்து சேவையை விரைவில் தொடங்க இருக்கிறார்களாம். இதற்காக, 100 இடங்களில் சாண எரிவாயு குழாய்களை அமைக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

அதோடு,சாண எரிவாயுவைக் கொண்டு பேருந்தை இயக்குவது மட்டுமின்றி மேலும் பல திட்டங்களை செயல்படுத்தவும் இருக்கிறார்களாம்.

“சாண எரிவாயு மிக மலிவானது மட்டுமல்ல.. சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவு” என்கிறார்கள் ஃபீனிக்ஸ் குழுமத்தினர்.

விரைவில் அந்த பேருந்து தமிழகத்துக்கும் வரட்டும். சென்னையில் இருந்து மதுரைக்கு 24 ரூபாயில் பயணிக்கலாம்!  சரிதானே!