டெல்லி: ஓட்டல் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்படும் கார்கள் திருடு போனால் அதற்கு அந்த ஓட்டல் நிர்வாகமே பொறுப்பு என்று உச்சநீதி மன்றம் அதிரடியாக கூறி இருக்கிறது.


டெல்லியில் தாஜ் மகால் ஓட்டலில் பார்க்கிங் பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. 1998ம் ஆண்டு அந்த கார் காணாமல் போனது. வாகன உரிமையாளர் ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்ட போது பொறுப்பாக பதில் கூறவில்லை.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் வாகன உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார்.

அதனை விசாரித்த நீதிமன்றம், தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாயம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. மேலும், ஓட்டல் நிர்வாகத்தின் கவனக்குறைவு, அலட்சியமும் கார் காணாமல் போக காரணம் என்று கூறி, காரின் உரிமையாளருக்கு ரூ. 2.80 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.


உச்ச நீதிமன்றம் தமது உத்தரவில் மேலும் கூறி இருப்பதாவது: ஓட்டலுக்கு வரும் கார்களுக்கு பார்க்கிங் ரசீது வழங்கும் நிர்வாகத்தினர் காரை அப்படியே திருப்பி தர வேண்டும். ரசீதில் இருப்பதை அப்படியே சொல்லிவிட்டு, அதன்படிதான் நடப்பேன் என்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது.