பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிர்கட்சியினர் பக்கோடா விற்க நேரிடும்….அகிலேஷ் யாதவ்

லக்னோ:

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் எதிர்கட்சித் தலைவர்கள் தெருக்களில் பக்கோடா விற்பனை செய்ய நேரிடும் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசம் எடாவா மாவட்டத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் சைக்கில் பேரணி இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,‘‘ மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும். அடுத்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்துவிட்டால் எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரும் தெருக்களில் பக்கோடா விற்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

பாஜக.வினர் ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர். அதிலிருந்து ஜனநாயகத்தை காக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு சைக்கில் பேரணி நடத்தப்படுகிறது.

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் ஜனநாயகத்தின் கதை முடிந்துவிடும். உத்தரப்பிரதேசத்தில் 2017-ம் ஆண்டு பல்வேறு சதிகளை செய்து ஆட்சியை கைப்பற்றிய பாஜக.விற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’’ என்றார்.
English Summary
If the BJP comes to power again in centre the opposition will have to sell Pakoda on streets says Akhilesh Yadav