கருணாநிதி செயல் படும் நிலையில் இருந்திருந்தால் ஆற்காடு வீராசாமி மூலமாக தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்களை நடத்தி முடித்திருப்பார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு நா.வீராசாமியின் முத்து விழா சென்னையில் நேற்று நடந்தது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் வரவேற்றார். முத்து விழா மலரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.  அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.

விழா மேடையில்..

இந் நிகழ்ச்சியில் சிறப்பு தபால் தலையை புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி வெளியிட முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார்.

நாராயணசாமி பேசும் போது, “திமுக தலைவர் கருணாநிதிக்கு நிகராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. தற்போது தமிழகத்தை டில்லி ஆட்டிவைக்கிறது. ஆளுங்கட்சியினர் குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்” என்று தமிழக அரசை காட்டமாக விமர்சித்தார்..

தி.மு.க. மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி. பேசும்போது, “அரசியலில் போட்டுக் கொடுத்து தன்னால் எந்த அளவுக்கு குளிர்காய முடியுமோ அந்த அளவுக்கு குளிர்காய வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் அதிகம். இவர்கள்மத்தியில் ஆற்காடு வீராசாமி முற்றிலும் மாறுபட்டவர். கட்சியில் ஒருவர் மீது கருணாநிதி கோபமாக இருந்தால், ஆற்காடு வீராசாமி சாதுர்யமாக செயல்பட்டு  கருணாநிதியின் கோபத்தை தணிப்பார். அத்துடன் தவறு செய்தவருக்கும் மன்னிப்பு கிடைக்கச் செய்வார்” என்று பேசினார்.

மு.க.ஸ்டாலின் பேசும் போது, “கட்சியினர்களுக்கு மட்டு மல்லாமல், கட்சித் தலைவர் குடும்பத்திலும் பிரச்சினை என்றாலும் ஆற்காடு வீராசாமிதான் தூதுவராக செயல்படுவார்.

தான் சொன்னதை சொன்னபடி முடித்துக் காட்டும் திறன் கொண்டவர். கருணாநிதி.  இப்போது  அவர் செயல்படும் நிலையில் இருந்திருந்தால் வீராசாமி மூலமாக தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்களை செய்து முடித்திருப்பார்.

திமுக எவ்வளவோ சோதனைகளை, பிரச்சினைகளை கடந்து வந்து இப்போதும் கம்பீரமாக இருக்கிறது என்றால் அதற்கு ஆற்காடு வீராசாமி போன்றவர்களே காரணம்”  என்று முக ஸ்டாலின் பேசினார்.

கருணாநிதியைப் போன்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அரசியல் நிகழ்வுகளை முழுமையாக உள்வாங்கி சிறப்பாக செயல்படுவதில்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்துவருகிறார்கள். குறிப்பாக தற்போது தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் குழப்பமான சூழல் நிலவும் நேரத்தில், முக ஸ்டாலின் சரியான அரசியல் நகர்த்தல்களை செய்யவில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. திமுகவின் உள்ளேயும் இதே கருத்து முணுமுணுப்பாக வெளிப்படுகிறது.

இந்த நிலையில், கருணாநிதி போல தன்னால் செயல்பட முடியவில்லை என்பதை முக ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

“தன்னைப் பற்றி வெளிப்படையாக மு.க. ஸ்டாலின் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியே. இதே நிலை தொடராமல் கருணாநிதியின் கடந்த கால அரசியல் செயல்பாடுகளை நினைத்துப்பார்த்தும், மூத்த அரசியில் தலைவர்களிடம் கேட்டும் அதே போல  இனியேனும் முக ஸ்டாலின் செயல்பட வேண்டும்” என்பதே திமுகவினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.