சென்னை: அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை  நேரடியாக பாஜக தலைமைக்கும், கூட்டணி கட்சிக்கும்  மிரட்டல் விடுத்தார். இது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலையின் பேச்சு காரணமாக, அதிமுக பாஜக கூட்டணி முறியும் சூழல் உருவாகி உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது அதிமுக பாஜக இடையேயான மோதல் போக்கு வெளிப்படையாக தெரிந்த நிலையில், அதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகள் இரு கட்சிகளுக்கு இடையேயேன மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. பாஜக ஐடிவிங்கை சேர்ந்த பலரை எடப்பாடி தரப்பு தங்கள் பக்கம் இழுத்த விவகாரம் மேலும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இரு கட்சியினரிடையே போராட்டங்களும், மோதல் போக்கும், விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்,  சென்னையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பூத் கமிட்டி அமைப்பது பற்றியும், கட்சிக்கு நிதி வசூலிப்பது குறித்தும் பேசினார். இதையடுத்து, பேசிய   மாநில தலைவர் அண்ணாமலை,  தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி என்ற பெயரில் தரங்கெட்ட செயல்களை அனுமதிக்க முடியாது.

வர இருக்கிற நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமை கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், நான், மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை என்றவர்,.  தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, சலாம் போடவும் முடியாது, தனித்து போட்டியிடவே விருப்பம் என்று கூறினார்.

இதுதொடர்பாக நான் பிரதமரை சந்தித்து பேச இருக்கிறேன், அதற்காக  நேரம் கேட்டு இருக்கிறேன் என்று கூறியதுடன், கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், நான்  வருகிற மே மாதம் 10-ந்தேதி வரை கட்சி பணிகளில் ‘பிஸி’யாக இருப்பேன் என்று தெரிவித்தார்.

அண்ணாமலையின் இந்த பேச்சால் பாஜக கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்க ஆட்சேபம் தெரிவித்த   மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி எழுந்து, உங்களுடைய (அண்ணாமலை) பேச்சு தெளிவாக இல்லை. அதனால் விளக்கமாக கூறுங்கள் என்றார்.

ஆனால், அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவாக, மதுரையை சேர்ந்த ஷா என்ற கட்சி நிர்வாகி நாராயணன் திருப்பதியின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தார்.  பல நிர்வாகிகள்  அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்  கட்சியின் மைய குழுவில் பேசவேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? என்று கண்டித்தார்.

இந்த கூட்டத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் காந்தி, சரஸ்வதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.