சபரிமலை செல்லும் பக்தர்களை அவசரகாலத்தில் மீட்க உதவும் வகையில் வண்டிப்பெரியார் அருகில் சத்திரம் பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை தயார் நிலையில் வைக்க இடுக்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவு அம்மாநில இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன் கொடுமன் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான அரசு நிலத்தை சீரமைத்து விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும் இது சபரிமலை யாத்திரை செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இதில் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும் கலந்து கொண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லாத இந்த திட்டத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

அதேவேளையில், வனவிலங்கு சரணாலயத்தின் 10 கி.மீ. சுற்றளவில் எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும் மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சத்திரம் விமான ஓடுதளத்தை தயார் செய்வதற்கான ஆட்சியரின் உத்தரவு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தேசிய மாணவர் படையின் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த ஓடுதளத்தில் இருவர் மட்டுமே பயணிக்க கூடிய சிறிய ரக வைரஸ் எஸ்.டபுள்யு. 80 ரக விமானங்கள் மட்டுமே தரையிறக்க முடியும்.

கடந்த சில மாதங்களாக பலமுறை முயற்சி செய்தும் இதன் அருகில் இருந்த குன்று இடைமறித்ததால் இந்த ஓடுதளத்தில் விமானத்தை இறக்க முடியவில்லை.

பின்னர் வனத்துறை மற்றும் மாநில அரசு இணைந்து இந்த குன்றை அகற்ற அனுமதி வழங்கியதை அடுத்து இரு தினங்களுக்கு முன் சிறிய ரக விமானம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

புலிகள் சரணாலயத்தில் இருந்து 600 மீட்டர் தூரம் மட்டுமே உள்ளதால் இது வனவிலங்குகளின் நடமாட்டத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வனவிலங்குகள் நடமாடும் பகுதியின் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் எந்தவிதமான அபிவிருத்தி திட்டங்களும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளது. இதன் காரணமாகவே இதனை சபரிமலை செல்லும் பக்தர்களின் அவசரகால வசதிக்காக பேரிடர் மீட்பு என்ற பெயரில் பயன்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இடுக்கி ஆட்சியரின் உத்தரவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு 650 நீள ஓடுதளத்தில் அதிக பட்சமாக இரண்டு சிறிய ரக விமானங்கள் மட்டுமே நிற்க முடியும் என்பதால் இதனால் சபரிமலை பக்தர்களுக்கு எந்த பயனும் இல்லை என்று கூறுவதுடன் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலக்கல் விமான நிலையம் இதற்கான சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.