“அ.தி.மு.க.வை  எவரும் அழிக்க விட மாட்டேன்”  என்று வைகோ தெரிவித்துள்ளார்..

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது, சட்டமன்றக்குழுத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக புறப்பட்டது,  கூவத்தூர் நட்சத்திர விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டது என்று சமீபத்தில் பரபரப்பான நிகழ்வுகள் பல தமிழக அரசியல் களத்தில் நடந்தன. அப்போதெல்லாம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல், கருவேல மரங்களை வெட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு கோரி தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அமளி செய்த பிறகு, சபாநாயகருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் வைகோ. தி.மு.க.வையும் கடுமயாக விமர்சித்தார்.

இந்த நிலையில், நாகர்கோவிலில் ம.தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசினார் வைகோ.

அப்போது அவர், “தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியபோது, நான் உள்ளம் உடைந்து கண்ணீர் விட்டு அழுதேன்.

ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அண்ணா, வீடு திரும்பும் வழியில் தேநீர் கடை ஒன்றில் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி இறங்கினார். வாகனத்தில் பறந்த கறுப்பு சிவப்பு தி.மு.க. கொடியைப் பார்த்த தேநீர் கடைக்காரர், “எம்.ஜி.ஆர். வந்திருக்கிறாரா” என்று அண்ணாவிடம் கேட்டார். அதற்கு அண்ணா, ‘அவர் இப்போது வரவில்லை, இன்னொரு நாள் வருவார்’ என்று சொன்னார்.

அண்ணாவின் அருகில் இருந்தவர், ‘உங்களிடமே எம்.ஜி.ஆரைத்தானே கேட்கிறார்கள்?’ என்றார். அதற்கு அண்ணா, ‘எம்.ஜி .ஆரை கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இதயங்களிலே வைத்திருக்கிறார்கள். அது இந்த இயக்கத்துக்குத் தேவை. அது நம் இயக்கத்தை வளர்க்கும்’ என்று புன்னகையுடன் சொன்னார்.

ஆனால், இன்று என்ன சொல்கிறார்கள்?.

“சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிக்காமல், எடப்பாடி பழனிசாமியை ஆதரித்துவிட்டார்கள். இவர்கள் தங்கள் சொந்த தொகுதிக்குள்ளே போக முடியாது.

ஆட்சியைக் கலைக்க வேண்டும். ஜனாதிபதியின் ஆட்சி வர வேண்டும்” என தி.மு.க. செயல் தலைவரின் கூடாரம் கூக்குரல் இடுகிறது.

நான் நடுநிலையோடு இருப்பவன். இரண்டு கட்சி ஆட்சிகளிலும் ஆற்றுமணல் சுரண்டப்பட்டு தமிழகம் நாசக்காடானது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுபவன். ஆனால், எம்.எல்.ஏ க்கள் ஊருக்குப் போக முடியாது என்கிறார்களே… ஏன்?.

எல்லா இடங்களிலும் தி.மு.க.வினர் ஆட்களை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். . அவர்கள் கரை வேட்டி கட்டாமல், பேண்ட் சட்டையில்  வந்து பொதுமக்களைப்போல கூச்சலிடுகிறார்கள். இதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறது திமுக.

எம்.எல்.ஏ. வீட்டுக்கு போக முடியாவிட்டால் ஆட்சியை கலைத்து விடுவார்களா?

1972 அக்டோபர் 10-ம் தேதி, எம்.ஜி.ஆர்.மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை.  தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தெருவுக்குள் வர முடியவில்லை.  அந்த காலகட்டத்தில் நடந்த பொதுக்கூட்டங்களைப் பத்து நிமிடத்தில் பொதுமக்கள் கல்லெறிந்து கலைத்தார்கள்.

அதைக்  கேள்விபட்டு, மனம் உடைந்தவனாக நெல்லைக்கு வந்தேன். அங்குள்ள 36 வார்டுகளிலும் கொடியேற்றி கூட்டங்களை நடத்தினேன். அப்போது, என் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினர்.  நூலிழையில் தப்பினேன்.

இப்போது எதிர்கட்சி செயல் தலைவராக இருப்பவரோ எந்தச் சங்கடத்திலும் சிக்கமாட்டார்; தப்பிவிடுவார், அவர் சுகவாசி.  நான் சாதாரண தரைப்படை சிப்பாய். அப்படித்தான் தி.மு.க.வில் இருந்தேன்.

நான் கேட்பது இதுதான். எம்.ஜி.ஆரை நீக்கிய காலகட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. யாரும் வெளியே வரமுடியாத நிலைதானே இருந்தது. அப்போது ஆட்சியைக் கலைக்கச் சொன்னார்களா?

தற்போது என்னை மிகவும் இழிவுபடுத்தி சமூகவலைதளங்களில் மீம்ஸ் பதிகிறார்கள். கடந்த இரு மாதங்களாக. இது அதிகரித்துள்ளது.

அதுபோலவே என் வீட்டு முகவரி தொலைபேசி எண்ணை  பதிந்து, நெருப்பால் இவனைச் சுடுங்கள் என்று சுற்றறிக்கை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்காக எல்லாம் நான் கவலைப்படவில்லை.

சமூகவலைதளங்களில் என்னை  இகழ்வதற்காக அதற்காக,  கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஒரு லைக்குக்கு 300 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால், இவை எதுவும் என்னை ஒன்றும் செய்யாது . நான் பிரளயங்களையும், எரிமலைகளையும் நேரடியாகச் சந்தித்துவிட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறவன்.

பெரியார், அண்ணா போன்றவர்கள் வளர்த்த திராவிட இயக்கம் அழிந்துவிடக்கூடாது என நினைப்பவன் நான். எம்.ஜி.ஆர், அண்ணாவின் படத்தைக் கொடியிலே போடவில்லை என்றால், அண்ணாவின் படமே உலகுக்குத் தெரிந்திருக்காது. அண்ணா தி.மு.க. என்பதால், அண்ணா இருக்கிறது. ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியில் அ.தி.மு.க.வை அழித்துவிடலாம் என்பது நமது திராவிட இயக்கத்தின் ஜென்ம விரோதிகளின் இலக்கு. அ.தி.மு.க.வை  எவரும் அழிக்க விட மாட்டேன்” என்று பேசிய வைகோ, இறுதியில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.