புதுடெல்லி: டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை, டிரா செய்வதில் தனக்கு விருப்பமில்லை எனவும், வெற்றியா? தோல்வியா? என்ற முடிவு கிடைப்பதிலேயே கவனம் செலுத்துவேன் எனவும் கூறியுள்ளார் கேப்டன் விராத் கோலி.
அவர் கூறியிருப்பதாவது, “டெஸ்ட் போட்டியின் எந்த சூழ்நிலையிலும் வெற்றியா? தோல்வியா என்ற முடிவு தெரியும் விஷயத்தில் சமரசம் செய்துகொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.
எனவே, கடைசி நாளில் 300 ரன்களுக்கும் மேல் விரட்ட வேண்டும் எனும்போது, எனது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்றால், இலக்கை நோக்கி அடித்து ஆடுவதாகத்தான் இருக்குமே தவிர, ட்ரா செய்வதாக இருக்காது.
சக வீரர்களிடமும் அதையேதான் கூறுவேன். இலக்கை நோக்கி அடித்து ஆடுவோம். 300 ரன்கள் என்றால் ஒரு செஷனுக்கு 100 ரன்கள், முதல் செஷனில் 80 ரன்கள் ஒன்று அல்லது 2 விக்கெட்டுகளை இழந்திருந்தால் கூட நடு செஷனில் களத்தில் இருக்கும் இரண்டு வீரர்கள் பொறுப்பைக் கையில் எடுத்து கொண்டு, எதிரணியின் பந்துவீச்சை ஆதிக்கம் செலுத்தி ஆடுவதுதான் சரி.
இரண்டாவது செஷனில் 100 ரன்கள் எடுத்திருக்கிறோம் என்றால் கடைசி செஷனில் 120 ரன்கள் தேவையாக இருக்கும். விக்கெட்டுகள் கையில் இருக்கிறது; உதாரணமாக 7 விக்கெட்டுகள் கையில் இருக்கிறது என்றால், ஒருநாள் போட்டி போல் அதை எடுக்கவே முயற்சி செய்வோம்.
எனவே, சூழ்நிலை மிக மோசமாகப் போனால் மட்டுமே தோல்வியைத் தவிர்ப்பதற்காகவே டிராவை நோக்கி ஆடுவேன். கடைசி நேரத்தில் மட்டுமே, போட்டியைக் காப்பாற்ற டிராவுக்கு ஆடுவேனே தவிர, மற்றபடி வெற்றிக்கான இலக்கை நோக்கி அடித்து ஆடுவதுதான் எனது அணுகுமுறையாக இருக்கும்” என்றுள்ளார் அவர்.