ஐதராபாத்:
கடந்த நவம்பர் 8ம் தேதி அன்று ஒரே இரவில் ரூ.100 கோடிக்கு தங்கம் விற்றதாக கணக்கு எழுதிய தங்க நகைக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 8ம் தேதி அன்று உயர்மதிப்புடை ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன் காரணமாக நாடு முழுவது உள்ள கறுப்பு பணத்தை மாற்ற இரவோடு இரவாக பல தகிடுதித்தோம் வேலைகள் நடந்தது. பலர்
கறுப்பு பணத்தை கொண்டு தங்கத்கை வாங்கி பதுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அன்று இரவு தங்க கடைகளில் விற்பனையான விபரங்களை மத்திய அரசு நோண்ட தொடங்கியது. இதன் வெளிப்பாடாக ஐதராபாத்தில் ஒரு நகை க் கடை சிக்கியது. இந்த கடையில் விற்பனையே நடக்காமல் போலி பில் மூலம் ரூ. 100 கோடி கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் வகையில் கணக்குள் தயாரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஐதராபாத் நகரில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளது முசாதிலால் நகைக்கடை. இந்த கடை மிகவும் பிரபலம். இந்த நகைக்கடை உரிமையாளர்கள் கறுப்பு பணம் மாற்றியதாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் இந்த கடையில் சில நாட்களுக்கு முன்னர் தீவிர சோதனை நடத்தினர்.
சோதனையில் நவம்பர் 8 ம் தேதி முறைகேடாக தங்கம் விற்றது தெரிய வந்தது. சோதனையில் சிக்கிய பில்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பெரும்பாலான பில்கள் ரூ. 2 லட்சத்திற்கு நகை விற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பான் எண் இணைக்கப்படவில்லை.
மேலும், இந்த பில்களில் போலி பெயர்கள், போலி முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது. டெல்லியின் கிரேட்டர் கைலாஷ், கைலாஷ் காலனியில் வசிப்பவர்கள் தங்கம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரே நாளில், வாடிக்கையாளர்கள் வாபஸ் பெறப்பட்ட பணம் மூலம் ரூ.100 கோடிக்கு தங்கம் வாங்கி சென்றதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஐதராபாத் நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். நகைக்கடையின் உரிமையாளர்களில் ஒருவரான கைலாஷ் சந்த் கைது செய்யப்பட்டார். 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். தேடும் பணி நடந்து வருகிறது. இவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.