டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி நாட்டை விட்டு ஓடிவிட்டார். இதற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இதில், ‘‘பிரதமருடன் நெருக்கமாக இருப்பவர்களும், மோடியை கட்டித் தழுவுபவர்களும் தான் இந்தியாவை கொள்ளையடிக்கும் மோசடிக்கு வழிகாட்டியாக இருக்கின்றனர். மதுபான அதிபர் விஜய் மல்லையாவை போல் முதலில் பிரதமர் மோடியை கட்டி தழுவுகின்றனர். பின்னர் நாட்டை விட்டு ஓடிவிடுகின்றனர்.

இந்தியாவை கொள்ளையடிக்க வழிகாட்டிய நிரவ் மோடி சுட்சர்லாந்து டாடோஸில் பிரதமரை கட்டி தழுவியதை பார்க்க முடிந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி 12 ஆயிரம் கோடி ரூபாயை திருடிக் கொண்டு அரசின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு விஜய் மல்லையாவை போல் நாட்டை விட்டு ஓடிவிட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த மாதம் டாவோஸில் நடந்த உலக பொருளாதார கூட்டமைப்பில் இந்திய சிஇஓ.க்களுடன் பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்தே ராகுல் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த குரூப் போட்டோவில் வைர வியாபாரி நிரவ் மோடி 2வது வரிசையில் நின்றிருந்தார். இதில் பிரதமர் மோடி முதல் வரிசையின் மைய பகுதியில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்களுக்கு உடன் செல்லும் சிஇஓ.க்கள் எந்த வகையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்?’’ என்று கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார்.