(காமராஜர் பிறந்தநாள் ஸ்பெஷல்..!)

 
காமராஜருக்கும், மற்றவருக்குமான மனவிருப்ப மாறுபாடுகள்!
காமராஜருக்கு நேர்எதிரான மனநிலை கொண்ட ராஜகோபால ஆச்சாரியார், அரசப் பதவிகளை அதிகம் விரும்பியதை இங்கே கவனத்தில் கொண்டுவர வேண்டியுள்ளது!
கடந்த 1937ம் ஆண்டிலேயே, காங்கிரஸ் உட்கட்சியில் தனக்கு இருந்த போட்டியை வெற்றிகரமாக சமாளித்து, முதல்வர் பதவியைப் பிடித்தவர் ராஜாஜி.
தான் சார்ந்த கட்சிக்கு, தேர்தலில்(1952) பெரும்பான்மையே கிடைக்கவில்லை என்றாலும்கூட, அதை சவாலாக ஏற்று, நிலைமையை சமாளித்து பதவியில் அமரும் அளவிற்கு ஆர்வம் கொண்டவர். கடந்த 1946ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற நிலையில், முதல்வராவதற்கு இவர் முட்டி மோதியதை மறந்துவிட முடியுமா!

திமுகவுடன் 1967ம் ஆண்டு அவர் அமைத்தக் கூட்டணி பெரிய வெற்றிபெற்றது. அக்காலக்கட்டத்தில், ராஜாஜிக்கு வயது 89. ஆனால், அப்போதும் முதல்வர் பதவிக்கு அடிபோட்டார் அவர்! நேருவை விட வயதில் மூத்த ராஜாஜி; அரசியல் அந்தஸ்தில் நேருவுக்கு சற்றும் சளைக்காத ராஜாஜி, நேருவின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இடம்பெறவும் தயங்கவில்லை!
காமராஜரின் குருநாதர் சத்தியமூர்த்தியும் அரசுப் பதவிகளைப் பிடிப்பதில் அதிக ஆர்வமுள்ளவர். ஆனால் இவர், பாவம்…! தலைமைப் பதவியைக்கூட ஆசைப்படவில்லை. தனக்கு ஒரு மந்திரி பதவி கிடைத்தால் சந்தோஷம் என்ற அளவில்தான் இருந்தார். 1937ம் ஆண்டு அந்த சாதாரண ஆசையில்கூட மண்ணைப் போட்டார் ராஜாஜி. சத்தியமூர்த்தியின் அமைச்சர் ஆசை கடைசிவரை கைக்கூடவேயில்லை.
தனது சீடர் காமராஜர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற தொடக்க காலத்தில், சென்னை மாநகர மேயர் பதவியை வகித்தார் சத்தியமூர்த்தி. பிரிட்டிஷ் அரசு வழங்கிய சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை அலங்கரிக்கவும் அவருக்கு கொள்ளை ஆசைதான்! ஆனால், காமராஜர் விடவில்லையே..!
ஆரம்பகாலம் தொட்டே, காந்தியுடன் முரண்பட்டு, அரசப் பதவிகளில் இடம்பிடிப்பதில் ஆர்வமுள்ளவராக சத்தியமூர்த்தி இருந்து வந்துள்ளதும் இங்கே ஒப்புநோக்கத்தக்கது! பிறருடன் இணைந்து அவர் தொடங்கிய சுயராஜ்ய கட்சி, சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சிக்கு சவாலாக இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
காமராஜர் – திமுக இடையிலான ஒற்றுமை!
காமராஜரின் அரசியல் திறம் குறித்த ஆய்வில், இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. அரசியல் பயணத்தைப் பொறுத்தவரை, காமராஜர் மற்றும் பெரும்பான்மை திமுகவினருக்கு(தொடக்க கால) இடையில் பெரிய ஒற்றுமை இருப்பதை கவனிக்கலாம்.

காங்கிரஸ் கட்சி என்பது பிராமணர் ஆதிக்க கட்சி என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டாலும், அது பிராமணரல்லாத ஆண்டைகளின் கட்சியாகவேத் தொடர்ந்தது. காங்கிரஸ் வேட்பாளர்களாக நின்ற சில ஆண்டைகள், தேர்தலில் பிரச்சாரத்திற்கே செல்லாமல், வாக்காளர்களை, அடியாட்களின் மூலம் மிரட்டி ஓட்டுவாங்கிய வரலாறுகளெல்லாம் தமிழகத்தில் உண்டு. கடந்த 1960களில், அரிசிக்காக, சாதாரண மக்கள், நிலப்பிரபுக்களிடம் கையேந்தி நின்றதுண்டு.
மிக எளியப் பின்னணியிலிருந்து, தொண்டர்களின் பலம், திராவிட இயக்கப் போராட்டம் மற்றும் தனது அரசியல் மதிநுட்பத்தால், காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பதவிக்கு வந்த காமராஜரால், காங்கிரஸின் முகத்தை பெரிதாக மாற்றிவிட முடியவில்லை. இத்தகைய அரசியல் அமைப்பில் அப்படியெல்லாம் மாற்றிவிட முடியாதுதான்!
எளியப் பின்னணி கொண்ட காமராஜர், அரசியலில் கோலோச்சுவதற்கு, திராவிட இயக்கத்தின் போராட்டம் பெரிய மற்றும் வசதியானதொரு களத்தை அமைத்துக் கொடுத்தது. அவர், ராஜாஜியை இறக்கிவிட்டு, 1954ம் ஆண்டு முதல்வராக அமர்ந்த நிகழ்விலும்கூட, பெரியாரின் ஆதரவு உதவியது.

திமுகவின் முன்னணி தலைவர்கள்(தொடக்க கால) பலரும்கூட, காமராஜரைப் போன்று எளியப் பின்னணிக் கொண்டவர்கள்தான்! காமராஜரை இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் அரசியல்மயப்படுத்தியது என்றால், திமுகவினரை திராவிட இயக்கப் போராட்டம் அரசியல்மயப்படுத்தியது. மொத்தத்தில் பார்த்தால், திராவிட இயக்கம் எளிய மக்களை அரசியல்மயப்படுத்தியது!
அதேசமயம், இரண்டு தரப்பினருக்கும், அரசியலில் ஒரு பெரிய களத்தை திராவிட இயக்கமே அமைத்துக் கொடுத்தது. அந்தக் களம்தான், பிராமணரல்லாத, அதேசமயம் பெரிய பின்புலம் இல்லாத இந்த இருதரப்பினரும் அரசியலில் கோலோச்சுவதற்கு உதவியுள்ளது.
இந்த இருதரப்பாரும், அவரவர் நிலைகளில், அரசியல் மதிநுட்பம் வாய்ந்தவர்களே..! இந்தவகையில், காமராஜர் – கலைஞர் கருணாநிதி இருவருக்கிடையில் அதிக ஒற்றுமை இருப்பதை உணரலாம்!
 
தமிழக அரசியலில் காமராஜரின் தாக்கம்
தமிழக அரசியலில் காமராஜரின் எழுச்சியானது, பிந்தைய நாட்களில், எளிய மக்களுக்கான அரசியல் வாய்ப்புகளை அதிகரித்தது எனலாம். காமராஜர் தமிழக முதல்வர் பதவியிலிருந்து இறங்கி 57 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் மறைந்து 45 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இது அவரின் 117வது பிறந்தநாள்!

ஆனால், தமிழக காங்கிரஸின் மிகப்பெரிய அடையாளமாக இன்னும் இருந்து வருபவர் அவர் மட்டுமே! அதற்கான காரணங்கள் வெள்ளிடை மலை! மேலும், தமிழக காங்கிரஸில் காமராஜரின் யுகத்திற்குப் பிறகு, எந்தக் குறிப்பிட்ட ஜாதியின் ஆதிக்கமும் இப்போது வரை இல்லை என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
திராவிடக் கட்சிகளின் அரசியலை மட்டம் தட்டுவதற்கும், அக்கட்சிகளை ஒழிப்பது தொடர்பான கோஷங்களுக்கும், காங்கிரஸ் கட்சி சாராத வேறு பலரால், இன்றைய நிலையில், காமராஜர் பயன்படுத்தப்பட்டு வருகிறார். பல இடங்களில், அவர் ஒரு ஜாதி தலைவராக சுருக்கப்படும் சம்பவங்களும் நடக்கின்றன.
சமூக அந்தஸ்து, குடும்பப் பின்னணி, கல்விப் பின்புலம் ஆகியவற்றின் அடிப்படையில், தன்னைவிட பெரிய பெரிய ஜாம்பவான்களையெல்லாம் ஓவர்டேக் செய்து, தன் புகழில் அவர்களையெல்லாம் கரைந்தோடச் செய்து, இன்றும் மிளிர்கிறார் காமராஜர்!
‘உன் எதிரியைக் காட்டு, நீ யார் என்று சொல்கிறேன்’ எனும் பழமொழிக்கிணங்க, காமராஜர் எதிர்த்த எதிரிகளின் தகுதிகளே, அவரின் திறமையைப் பறைசாற்றுகின்றன.
பெரிளவிலான குடும்பப் பின்புலமோ, செல்வாக்கோ இல்லாத நபர்களுக்கு, அரசியலில் பெரிய வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அபூர்வம். அப்படியே கிடைத்தாலும், அதற்கு தகுந்த அர்த்தம் கற்பித்து, அதில் நீண்டகாலம் கோலோச்சுவது என்பதெல்லாம் வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கும் அபூர்வ திறன்..!

அந்தத் திறன் வாய்க்கப்பெற்றவராய், அன்றைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் (1910ம் ஆண்டில்தான் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டம் உதயமானது) விருதுபட்டியில் பிறந்த காமராஜர், சென்னையில் மையம் கொண்டு, டெல்லி வரை சென்று கொடி நாட்டியவர்! உலகளவிலும் புகழ்பெற்றவர்!
இது தேவையற்ற அரசியல்!
நல்ல மனிதர், நல்ல சிந்தனையாளர், சிறந்த & திறமையான அரசியல்வாதி என்ற பல முகங்கள் காமராஜருக்கு உண்டு. எனவே, தன் எதிர்முகாமில் இருந்தவர்களை, அரசியல் காரணங்களுக்காக தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதையெல்லாம், பெருந்தன்மை அரசியல் என்ற சாயம் பூசுவது சரியானதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால் நலம்!
அனைவரையும் அரவணைத்துக்கொண்ட அரசியலுக்கு, தமிழகத்தில், அறிஞர் அண்ணா மிகவும் புகழ்பெற்றவர்! தன்னை மிக மோசமாக விமர்சித்தவர்களையும் எதிர்த்தவர்களையும் தன்னிடம் சேர்த்துக்கொண்ட கதைகள் கலைஞர் கருணாநிதியிடம் பல உண்டு. அந்த நீட்சி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று தொடர்ந்ததோடு, அரசியலில் எப்போதுமே இருந்துவரக்கூடிய ஒரு சாதாரண வியூகம்தான் அது!

எனவே, தன் எதிர் முகாமிலிருந்த சி.சுப்ரமணியம், பக்தவச்சலம் போன்றோரையும் தன் அமைச்சரவையில் சேர்த்துக்கொண்ட அரசியல் பெருந்தன்மையாளர் காமராஜர் என்ற கூற்றை ஆதரிப்பவர்களுக்கும், அரசியலை அரசியலாக மட்டுமே பார்த்து, கேட்டு, படித்து, அறிந்து, ரசித்து சிந்திப்பவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன..!

(நிறைவு)

 
– மதுரை மாயாண்டி