சென்னை:

ஜெயலலிதா சிகிச்சை குறித்து கவர்னர் அனுப்பிய 2 அறிக்கை விபரங்களை வெளியிட உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். அவர் செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் 3 முறை மருத்துவமனை சென்று அப்பல்லோ தலைவர், டாக்டர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். அக்டோபர் 1, 22 மற்றும் டிசம்பர் 4ம் தேதி இந்த ஆலோசனைகள் நடைபெற்றது. இந்த ஆலோசனை விபரங்களை 3 முறையும் அறிக்கையாக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். 3வது அறிக்கையை டிசம்பர் 7ம் தேதி அனுப்பியுள்ளர்.
இந்த அறிவிப்பு விபரங்களை அளிக்குமாறு தந்தி டிவி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளிக்கப்பட்டது. இதில் முதல் 2 அறிக்கை விபரங்களை அளிக்க உள்துறை மறுப்பு தெரிவித்துவிட்டது. 3வது அறிக்கை விபரங்களை மட்டும் வழங்கியுள்ளது. அதில், கவர்னர் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் 22ம் தேதி கடுமையான காய்ச்சலால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் உடல் நிலை மோசமடைந்தது. இதை தொடர்ந்து அடுத்த 50 நாட்களுக்கு அவருக்கு தலைசிறந்த மருத்துவம் அளிக்கப்பட்டது.
நவம்பர் 19ம் தேதி தனி வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்பட்டார். டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக என க்கு தகவல் வந்தது. பின்னர் 5ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் என்னை சந்தித்தனர். 133 எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வத்தை முதல்வராக பொறுப்பேற்க ஆதரவு அளித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து 6ம் தேதி அதிகாலை 1 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கவர்னரில் முதல் 2 அறிக்கை நம்பிக்கை தன்மை காரணமாக வழங்க இயலாது என உள்துறை மறுப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.