டெல்லி:

ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் அமித்ஷாவுடனான கூட்டு உள்துறை ஆவணம் மூலம் அம்பலமாகியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி அமோக வெற்றி பெற்று டெல்லிக்குள் நுழையும் போதே, அவரது ஆதரவாளர்களும் டெல்லியில் குடியேறிவிட்டனர். இவர்கள் தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், வக்கீல்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள், அரசியல் புரோக்கர்கள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் போன்று அதிகாரத்தில் எளிதில் தலையிட்டு, அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்க கூடியவர்கள் ஆவர்.

சமீபத்தில் ஹிந்துஸ்தான் பத்திரிக்கையில் நிர்வாக ஆசிரியர் சிஷிர் குப்தா, பா.ஜ தலைவர் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிக்கு கடந்த மார்ச் 28ம் தேதி அனுப்பிய இ.மெயில் ஆவண நகல் ஒன்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மற்றொரு ஆவணத்துடன் எதிர்பாராதவிதமாக சேர்ந்து வந்துவிட்டது.

அந்த மெயில் தகவலை ப்ரன்ட்லைன் பத்திரிக்கையின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் பாஜ அரசுக்கு ஒரு பத்திரிக்கையாளர் எப்படி ஆதரவாக பணியாற்றியுள்ளார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. டெல்லியில் நடக்கும் ஆம் ஆத்மி ஆட்சிக்கு எதிராக மத்திய அரசு நடத்தும் பனிப்போருக்கு இந்த ஆசிரியர் தூபம் போடும் வேலையை செய்துள்ளார்.

டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்து கடந்த மாதம் 22ம் தேதி ராஜினாமா செய்த நஜீப் ஜங் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடையே பனிப்போர் வெடித்ததற்கு, இந்த ஆசிரியர் பிரதமர் அலுவலகத்துக்கும், அமித்ஷாவுக்கும் ‘விதிமீறல்’ என்ற தலைப்பில் வழங்கிய ஆலோசனைகள் தான் அடிப்படை காரணமாக இருந்துள்ளது.

‘மத்திய அரசுக்கு எதிராக கெஜ்ரிவால்’ என்ற தலைப்பில், தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள அனைத்த அதிகாரமும் கெஜ்ரிவால் தான் கையில் வைத்துள்ளார். உள்துறை, டெல்லி பாஜ எம்எல்ஏ.க்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அமித்ஷா மற்றும் பிரதமர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு பணி அதிகாரி ஹிரேன் ஜோஸ் என்பவருக்கு தெரிவித்துள்ளார்.

இந்த ஆசிரியரின் மெயில் தகவலில், ஒரு நிருபர்கள் கட்டுரைக்காக கேட்க வேண்டிய, விசாரிக்க வேண்டிய தகவல்கள் எதுவும் அதில் இடம்பெறவில்லை. மாறாக தகவல்களை அரசுக்கு அளித்துள்ளார்.
குறிப்பாக, காவல்துறை, நிலம் தொடர்பான ஆவணங்கள் துணை நிலை ஆளுநருக்கு செல்வதற்கு முன் முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதை அவர் ‘விதிமீறலுக்கான எடுத்துக்காட்டு’ என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கட்டுரை வெளியிடுவதற்கு ஏதுவாக தீர்வை கேட்டு மெயில் அனுப்பியதாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் அலுவலகத்திடம் இருந்தோ, அமித்ஷாவிடம் இருந்தோ எந்த பிரதிபலிப்பையும் எதிர்பார்க்கவில்லை என்றும் அந்த பத்திரிக்கை பதில் அளித்துள்ளது.
ஆனால், இந்த மெயிலுக்கு பிரதமர் அலுவலகம் அதிக முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக செயல்பட்டதாக ப்ரனன்ட் லைன் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 31ம் தேதி பிரதமர் அலுவலக அதிகாரி நிரிபேந்திர மிஸ்ரா, உள்துறை கூடுதல் செயலாளர் அனந்த் குமார் சிங்கை அழைத்து. இந்த மெயில் தொடர்பாக 5 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அந்த ஒரு பக்க மெயில் முக்கிய ஆவணமாக கருதப்பட்டு, உள்துறையில் அது கவனமாகவும், மிக தீவிரமாகவும் ஆராயப்பட்டது.
உள்துறை அதிகாரியான ஆனந்த் குமார் தனது குறிப்பில் ‘‘பிரதமரின் முதன்மை செயலாளர் என்னை இன்று 12.30 மணிக்க அழைத்து மார்ச் 28ந் தேதியிட்ட மெயில் நகலை ‘ஏ’ கொடியிட்ட கோப்பை கொடுத்து உண்மை நிலவர அறிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் கேட்டுள்ளார். இதன் மீது டெல்லி துணை நிலை ஆளுநர் அறிக்கையை புதன் கிழமை பெற்று பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

தன் பக்கம் நியாயம் இருக்கிறது. எதுவும் தவறாக பயன்படுத்தவில்லை. கட்டுரைக்கு கேட்கப்பட்ட கேள்விகளை தவிர அதில் ஒன்று தவறாக இடம்பெறவில்லை என்று அந்த பத்திரிக்கை நிறுவனம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை யாருடைய பெயரும் இடம்பெறாமல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹந்துஸ்தான் டைம்ஸ் இதழ் டெல்லியில் வெளிவரும் முன்னணி நாளிதழாகும். குப்தா கடந்த 2015ம் ஆண்டு அதன் ஆசிரியராக பொறுப்பேற்றார். இவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். மோடியின் பிரத்யேக சிறப்பு பேட்டிகளை வெளியிட்டவர். மோடியுடன் தான் நெருக்கமாக இருக்கம் புகைப்படத்தை அவரது டுவிட்டர் பக்கத்தில் குப்தா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.