தானே:

கராஷ்டிர மாநிலம், பிவாந்தியில், மகர சங்கராந்தி பண்டிகையை, முதன்முறையாக, இந்து மற்றும் இஸ்லாமியர்  இணைந்து, கொண்டாடினர்.

தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை போல, மகராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில், மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அறுவடை திருநாளாகவும், சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மகராஷ்டிர மாநிலம், தானே அருகில் உள்ள, பிவாந்தியில், இஸ்லாமியர் பெருமளவில்
வசிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் அடிக்கடி மதக் கலவரங்கள் ஏற்படுவது உண்டு. கடந்த  1970 மற்றும் 1984ம் ஆண்டுகளில் இங்கு மதக்கலவரம் மூண்டு,   நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை  ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இங்கு வசிக்கும் இரு மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரது சேர்ந்த முயற்சியால், முதன்முறையாக, நேற்று முன்தினம், இந்த பகுதியில் மகர சங்கராந்தியை, இந்து மக்களுடன் இணைந்து இஸ்லாமிய மக்களும்  கொண்டாடினர்.

இரு மதங்களைச் சேர்ந்த பெண்கள், ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறி, வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

இந்த பகுதியில் வசிக்கும், அப்பாஸ் குரேஷி, (வயது 78)  என்பவர், “இரு தரப்பினருக்கு இடையே நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் வகையிலும், இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து, இந்த பண்டிகையை கொண்டாடினோம். இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரது முயற்சியால், இது சாத்தியமானது. இரு தரப்பினரும் இணைந்து, மகர சங்கராந்தியை கொண்டாடுவது, இதுவே முதன்முறை. இது இது தொடரும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மகரசங்கராந்தியை முன்னிட்டு பட்டம் விடுவது வழக்கம். இந்த நிகழ்வின் போது இரு தரப்பைச் சேர்ந்த பெண்களும் பட்டம் விட்டு மகிழ்ந்தனர்.