சென்னை: கோயில் நிலத்தில் அரசு அமைத்த உழவர் சந்தையை மூடி சீல் வைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் அதற்கான இழப்பீட்டையும் வழங்க அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அரசும், பொதுமக்களும் ஆக்கிரமித்து வருகின்றன. இதை கண்டுபிடித்து மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், சேலம் அருகே உள்ள  பிரபலமான சிவன் கோவிலான எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை சுற்றி, தமிழகஅரசு உழவர்சந்தை அமைத்தது. அதற்காக இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தது. ஆனால், இதுவரை உழவர் சந்தை அமைப்பதற்கான ரூ.93 லட்சம் வழங்கப்படவில்லை என  தொடரப்பட்ட வழக்கில், கோயில் நிலத்தை அபகரித்து,  அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல் வைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்,   உழவர் சந்தை அமைந்துள்ள இடத்துக்கான இழப்பீடு தொகையான ரூ.93,09,870ஐ உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.  இழப்பீடு தொகையை செலுத்தும் வரை உழவர் சந்தைக்கு சீல் தொடரும் என்றும் கூறி உள்ளது.