சென்னை: சாதி மதமற்றவர் சான்றிதழ் கோரிய விண்ணப்பதாரருக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய சான்றிதழ் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபகாலமாக பலர் சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால் அதை வழங்கஅரசு அலுவலகங்கள் மறுத்து வருகிறது. சாதி, மதம் சார்ந்தே அனைத்து வகையான நடவடிக்கைகளும் இருப்பதால், சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் தருவது சிக்கலாக உள்ளது.

இதுதொடர்பாக, அண்ணாநகரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் தனது மகன் யுவன் மனோஜ்-க்கு  அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சாதி மதமற்றவர் என சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்திருந்தார். அதை தாசில்தார்  நிராகரித்தால், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவில்,  தனது மகன் யுவன்மனோஜை, அம்பத்தூரில் உள்ள பள்ளியில் சேர்த்தபோது, அங்குள்ள அலுவலர்கள், விண்ணப் படிவத்தில் சாதி, மதம் தொடர்பான பத்தியை நிரப்ப வலியுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், தனது மகனை அங்கு சேர்த்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.  இதையடுதது தமது மகனுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் வழங்கக் கோரி அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜெகதீசன் விண்ணப்பித்ததாகவும்,  தனது மகனுக்கு சாதி  மதம் இல்லை என்ற சான்றிதழை அம்பத்தூர் தாசில்தார் வழங்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று  நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யுவன் மனோஜிற்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.