உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு: ராமதாஸ் வேதனை

Must read

சென்னை,

யர்நீதிமன்றம் கடந்த காலங்களில் வழங்கியத் தீர்ப்புகளுக்கு எதிராக புதிய தீர்ப்பை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி வழங்குவது நியாயமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“மதுக்கடைகளுக்கு எதிரான கிராமசபைக் கூட்டத் தீர்மானம் குறித்துக் கவலைப்படத் தேவை யில்லை என்றும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் மதுக்கடைகளை திறக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சென்னையை அடுத்த பொன்னேரியில் திறக்கப்பட்ட அரசு மதுக்கடையை மூட ஆணையிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

‘‘டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பது தமிழ்நாடு அரசின்  சில்லறை மது விற்பனை விதிகளின் படியும், உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பின்படியும்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதில் ஏதேனும் விதி மீறல்கள் இருந்தால் மதுக்கடைகளை மூட ஆணையிடலாம். மாறாக கிராம அவைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் காரணம் காட்டி மதுக்கடைகளை மூட ஆணையிட முடியாது’’ என்று அத்தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மதுவுக்கு எதிராக போராடும் மக்களின் மனநிலையையும், இதுதொடர்பாக கடந்த காலத்தில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அளித்த தீர்ப்புகளையும் நீதிபதிகள் கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.

சில்லறை மது விற்பனை விதிகள் எனப்படுவது 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசால் உருவாக்கப்ப பட்டது.  2003 ஆம் ஆண்டிற்கு முன்பாக தமிழகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் மதுக்கடைகள் இருந்தன. அவை அனைத்தும் ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தான் அமைக்கப்பட்டி ருந்தன.

ஒரு கட்டத்தில் மது வணிகத்தை அரசே எடுத்துக் கொண்ட நிலையில், கூடுதல் வருமானம் ஈட்ட வசதியாக தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறப்பதற்கு  வசதி யாகத்தான் சில்லறை மது விற்பனை விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகளை மட்டும் கருத்தில் கொண்டால் தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் மட்டும்தான் திறக்கப்பட்டிருக்கும்.

மதுக்கடைகள் திறப்பதற்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும்போது சட்டத்தை மட்டுமின்றி, மக்கள் நலனையும் நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்று எந்த சட்டத்திலும்  விதிகளிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், சாலை விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தடுக்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்தான் இத்தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியது.

சில்லறை மது விற்பனை விதிகளை மட்டும் கருத்தில் கொண்டிருந்தால் இப்படி ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்க முடியாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டதால்தான் இந்தத் தீர்ப்பு சாத்தியமானது.

சாலைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் இருந்து எவ்வளவு தொலைவுக்கு அப்பால் மதுக்கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கு சரியான வழிகாட்டுதல்கள் இவ்விதிகளில் உள்ளன. ஆனால், குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை திறப்பது குறித்து தெளிவான வழிகாட்டுதல் இல்லை.

இத்தகைய சூழலில், குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படுவதால் பாதிக்கப்படும்  மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே நீதியரசர் பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வும், நீதியரசர் நாகமுத்து தலைமையிலான அமர்வும் மதுக்கடைகளுக்கு எதிராக கிராம அவைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து  மதுக்கடைகளை மூட வேண்டும் என தீர்ப்பளித்தன.

அதுமட்டுமின்றி, மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை பரிசீலித்து மதுக்கடைகள் மூடுவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி நாகமுத்து அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக மராட்டிய மாநிலத்தில் 1949-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மதுவிலக்குச் சட்டத்தின்படி மதுக்கடைகளுக்கு எதிராக கிராம அவைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டால், அதனடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்திருந்தால் அடுத்த நிமிடமே அங்குள்ள மதுக்கடை மூடப்படவேண்டும்.

இவை அனைத்தும் மது அரக்கனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அரசும், நீதிமன்றங்களும் செய்த பாதுகாப்பு ஏற்பாடுகளாகும்.

ஆனால், தமிழக அரசு மக்களின் உணர்வுகளையெல்லாம் மதிக்காமல் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை திறந்துவரும் நிலையில், அதிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த காலங்களில் வழங்கியத் தீர்ப்புகளுக்கு எதிராக புதிய தீர்ப்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்குவது நியாயமல்ல.

இத்தீர்ப்பைப் பயன்படுத்தி குடியிருப்புப் பகுதிகளில் தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க முற்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்; அது பொது அமைதியை பாதிக்கும். இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு கிராம அவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதனடிப்படையில் மதுக்கடைகளை மூட ஆணையிட முடியாது என்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் மறு ஆய்வு செய்யவேண்டும்” என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article