இனி குழந்தைகளுக்கு அலகு குத்த மாட்டேன்!: தந்தை ரமேஷ்

நேற்று முன்தினம் முகநூலில் பதிவிடப்பட்ட படங்கள் சில அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

சுமார் ஐந்து மற்றும் மூன்று வயது குழந்தைகளுக்கு கன்னங்கள், நெஞ்சுப்பகுதியில் அலகு குத்தி எலுமிச்சை பழங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அக்குழந்தைகள் வலியால் கதறிக்கொண்டிருந்தார்கள்.

இந்தப் படத்தை பதிவிட்ட ரமேஷ் சி.ஆர். என்பவர், “இன்று சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஸ்ரீ முண்டக்கன்னியம்மன் கோயிலில் எங்கள் செல்வங்களுக்கு பழம் குத்தப்பட்டது” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு முகநூல் பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இந்தப் படத்தைப் பகிர்ந்து, “குழந்தைகளை இப்படிக் கொடுமைப்படுத்தலாமா? அரசு தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இந்த நிலையில் patrikai.com இதழின் சார்பாக, இந்த சம்பவம் குறித்து சிலரிடம் கருத்து கேட்டோம்.  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பிரபல மனநல மருத்துவர் ஷாலினி, மனித உரிமை ஆணைய தலைவர் நிர்மலா ஆகியோரிடம் பேட்டி கண்டு வெளியிட்டோம்.

இந்த நிலையில் குறிப்பிட்ட குழந்தைகளின் தந்தை ரமேஷை தொடர்புகொண்டோம்.

புகைப்படக்காரராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி திருலேச்சணி.

இவர்களுக்கு இரு குழந்தைகள். மூத்தவர் மகள், நந்திதா. ஐந்து வயது. ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்.

இளையவர் மகன். வர்ணேஷ். இரண்டரை வயது ஆகிறது.

இந்த நிலையில்தான் இவர்களுக்கு அலகு குத்தி அந்தப் படங்களை முகநூலில் பதிவிட்டு சர்ச்சையானது.

ரமேஷிடம், “சின்னஞ்சிறு குழந்தைகளை நேர்த்திக்கடன் என்கிற பெயரில் வதைக்கலாமா?” என்று கேட்டோம்.

அதற்கு அவர், “எனக்கும் என் மனைவிக்கும் இந்த இரண்டு குழந்தைகள்தான் ஆதாரம். இவர்கள்தான் எங்கள் உயிர். சமீபத்தில் குழந்தைகளுக்கு உடல்நிலை முடியாமல் போய்விட்டது. தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்தோம். அதோடு என் மனைவி, “குழந்தைகளுக்கு விரைவில் குணமடைந்தால் அம்மனுக்கு அலகு குத்துகிறோம்” என்று வேண்டிக்கொண்டாள்.

ஆனால் இதில் எனக்கு விருப்பமில்லை. குழந்தைகளைக் கஷ்டப்படுத்த வேண்டாம். நான் வேண்டுமானால் அலகு குத்திக்கொள்கிறேன் என்றேன்.

ஆனால் யாருக்காக வேண்டிக்கொண்டோமோ அவர்கள்தான் அலகு குத்திக்கொள்ள வேண்டும் என்றார்கள்.

அதனால்தான் குழந்தைகளுக்கு அலகு குத்தினோம். அதுவும் வலிக்குமே என்று, குறைவாகத்தான் அலகு குத்தினோம். கன்னங்கள் மற்றும் நெஞ்சு பகுதியில் தலா ஐந்து அலகுகள்தான் குத்தினோம்” என்றவர், “குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதானே பெற்றவர்கள் விரும்புவார்கள்? அவர்களை துன்புறுத்த நினைப்பார்களா? நேர்த்திக்கடன் முடித்த நிம்மதியில் அந்த புகைப்படங்களை முகநூலில் பதிவிட்டேன். அதற்கு இத்தனை எதிர்ப்பு வரும் என்று நினைக்கவில்லை. ஆகவே அதை அகற்றிவிட்டேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ” சிலர் எங்களை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் முகநூலில் பதிவு செய்வதைப் படிக்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஒருவேளை எங்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த இரு குழந்தைகளை யார் பாதுகாப்பார்கள்? இன்று குழந்தைகளுக்கு கொடுமை என்று எழுதியவர்கள் எவராவது எங்கள் குழந்தைகளுக்கு ஒருவேளை சாப்பாடு போடுவார்களா? தெரியாமல் செய்துவிட்டேன். இதை இத்தோடு விட்டுவிடுகங்கள் என்று அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்” என்றார் கலங்கிய குரலில்.

பிறகு, “ஆனா, நேர்த்திக்கடன் என்கிற பெயரில் குழந்தைகளை சிரமப்படுத்தக்கூடாது என்று தெரிஞ்சிகிட்டேன். இனி இப்படி செய்யமாட்டேன்” என்றார் உறுதியான குரலில்.
English Summary
Hereafter I wont piece children with vel : Father agreed