ஐதராபாத்:  வெப்பம் அதிகரித்துள்ளால்,  தெலுங்கானாவில் பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என மாநிலஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சமீப காலமாகவே நாட்டின் பல பகுதிகளில் காலநிலை என்பது சராசரி அளவை விட அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்திலும் கடந்த சில நாள்களாக வெயிலின் அளவு 36 முதல் 38 டிகிரி என்று பதிவாகி வருகின்றது. அதீத வெயிலால் பள்ளி மாணவர்கள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்று வருவதால், மற்ற வகுப்புகளுக்கு பள்ளி தேர்வுகள் முடியும் வரை, அரைநாள் மட்டுமே பள்ளி செயல்பட மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.]

இதுகுறித்து தெலங்கானா அரசு வெளியிட்ட அறிவிப்பில், “மாநிலம் முழுவதும் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் மழலை, உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் நிகழ் கல்வியாண்டின் மீதமுள்ள நாள்களில் காலை 8 மணிமுதல் பகல் 12.30 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும்.  அதே நேரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் உள்ள மதிய உணவு, சத்துணவு பகல் 12.30 மணிக்கு அளிக்க வேண்டும். மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம். 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் உள்ள பள்ளிகள் பகல் 1 முதல் மாலை 5 வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.