மரம் நடுவிழாவில் சாமியார்

ரோஹ்தக்

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதை அடுத்து தற்போது ரோஹ்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  சிறையில் அடைக்கப்படும் போது உள்ளே செல்ல மாட்டேன் என ஒரு குழந்தையைப் போல் அடம் பிடித்து அழுது கதறி உள்ளார்.  பிறகு காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக சிறையினுள் அழைத்துச் சென்று அவருக்கான அறையில் அடைத்துள்ளனர்.  அறையில் வசதிகள் ஏதும் இல்லை என சொன்ன சாமியாரை அதிகாரிகள் சமாதானப்படுத்தி உள்ளனர்.   தன் கோபத்தை காட்ட இரவு உணவு உண்ணாமல் பால் மட்டும் சாமியார் அருந்தி உள்ளார்.

அடுத்த நாள் முதல் அவர் ஏதும் சிறையில் பணி புரிய வேண்டும் என சொல்லப் பட்டது.   முதலில் மறுத்த அவர் அதிகாரிகள் சமாதானப்படுத்திய பின்பு ஒப்புக் கொண்டுள்ளார்.  சிறையில் உள்ள தொழிற்கூடத்தில் பணி புரியலாம், அல்லது தோட்ட வேலைகள் செய்யலாம் என கூறப்பட்டதின் பேரில் அவர் தோட்ட வேலையை தேர்ந்தெடுத்துள்ளார்.  அவருக்கு தோட்டப் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.   கோடி கோடியாக சொத்து சேர்த்த ராம் ரஹீமுக்கு தற்போது தினசரி கூலியாக ரூ. 40 தரப்பட உள்ளது.

தற்போது தோட்டக்காரராக பணி புரியும் ராம் ரஹிம் பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக் என்னவென்றால், தேரா சச்சா சவுதாவின் இணைய தளத்தில் வந்த ஒரு செய்தி.  கடந்த 2009 ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்பட்ட அந்த செய்தியில் சாமியாரின் சீடர்கள், அவர் தலைமையில் ஒரு மணி நேரத்தில் 9,38,007 மரங்கள் நட்டு கின்னஸ் சாதனை புரிந்ததாக கூறப்பட்டுள்ளது.

ஒரு முறை சாமியார் தனக்கு 5 கோடி பக்தர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதையே தாம் விரும்புவதாக கூறி இருந்தார்.   தற்போது சிறையில் வேலை நேரத்திலோ, அல்லது ஓய்வு நேரத்திலோ யாரையும் அவர் பார்ப்பதோ, யாரிடமும் பேசுவதோ கிடையாது.