மதுரை:  அரசு ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி  வரும் 28ந்தேதி அரசு ஊழியர்கள் மண்டல அளவில்  உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிதி ஆதாரம் இல்லாததால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என . தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கூறி வருகிறார்.

இதுதொடர்பாக, கடந்த 2022ம் ஆண்டு,  டிசம்பர்  17 ல் சேலத்தில் அரசு ஊழியர்களின்   மாநில பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில்,  அடுத்தக்கட்ட போராட்டம்  குறித்து முடிவு செய்யப்பட்டதாகவும்,   நியாயமான கோரிக்கைகளை தீர்க்காத பட்சத்தில் போராடித்தான் அவற்றை வென்றெடுப்போம் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் ஏ.செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்த  நிலையில்,  அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் ஜனவரி 28ந்தேதி  மண்டல அளவில்உண்ணாவிரதம் நடத்தப்படுவதாக மாவட்டதலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு அறிவித்தபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்த நாள் முதல் வழங்குவது, ஈட்டிய விடுப்பு சலுகை மீண்டும் வழங்குவது, சத்துணவு,அங்கன்வாடி, ஊர்புற நுாலகர்களை பணி நிரந்தரம் செய்வது, கொரோனா பணியாளர்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இவற்றை, தற்போது வரை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை எனவே முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஜனவரி 28ந்தேதி மண்டல அளவிலான உண்ணாவிரதத்தை நடத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.