பழனிச்சாமி வாத்தியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் பட்டையைக் கிளப்ப வருகிறார் கவுண்டமணி.

கவுண்டமணி காமெடி ட்ராக் இருந்தாலே படம் வெற்றி என்ற நிலையை ’80 – ’90 களில் தமிழ் திரையுலகில் உருவாக்கி வைத்திருந்தவர் இவர்.

ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்கள் மட்டுமன்றி அறிமுக நடிகர்களுடன் நடித்தாலும் அந்தப் படத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர்.

2016 ம் ஆண்டு வெளியான வாய்மை படத்திற்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் இருந்த இவரை தற்போது ‘பழனிச்சாமி வாத்தியார்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் இவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி ஆகியோர் தவிர சித்ரா லட்சுமணன், டி. சிவா, மனோபாலா, ஜெ.எஸ்.கே. சதிஷ்குமார், நந்தகுமார். ஆர்.கே. சுரேஷ், மதுரை டாக்டர் சரவணன், மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார் ஆகிய தயாரிப்பாளர்களும் நடிக்க இருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.