தமிழர்களே குட்பை!: கட்ஜூ அதிரடி முடிவு!

மிழர்கள் தன்னை தொடர்ந்து அவதூறாக விமர்சித்து வருவதால் இனிமேல் தமிழர்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் எந்தப் பதிவும் இடப் போவதில்லை என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் முகநூல் பதிவுகள் மிகவும் பிரபலம். நாட்டு நடப்புகள் குறித்து தனது பார்வையை விறுவிறுப்பான எழுத்து நடையில் பதிவு செய்வார். அவரது பதிவுகளை விரும்பிப் படிப்போர் பல்லாயிரம் பேர் உண்டு.தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது, அதை ஆதரித்து அவர் எழுதிய பதிவுகள் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு  பெற்றது. அப்போது அவர், “ நானும் தமிழனே” என்றும் உணர்ச்சிகரமாக பதிவிட்டார்.

கட்ஜூ

இந்த நிலையில் சமீபத்தில் ஜெயலலிதா மரணம் மற்றும் கருணாநிதி மரணம் குறித்து அவர் ஒரு பதிவை வெளியிட்டார்.  அதில் ஜெயலலிதா, கருணாநிதிக்காக ஏன் தமிழக மக்கள் அழுகிறார்கள். கருணாநிதியின் குடும்பம் குறித்தும் அவர்கள் சேர்த்த சொத்துக்கள் குறித்தும் கவலைப்பட வேண்டும். காமராஜர் மரணித்தபோது அவரிடம் சொத்து எதுவும் இல்லை. எத்தனை முரண்பாடு என்று தெரிவித்திருந்தார்.

கட்ஜுவின் இந்த பதிவு கருணாநிதி ஆதரவாளர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பலரும் கட்ஜுவின் பதிவில் வந்து கடும் கண்டனங்களைக் பின்னூட்டங்களாக எழுதினர்.

இதில் பலர் கட்ஜூவை ஜாதி ரீதியாக விமர்சித்தனர்.

இதையடுத்து கட்ஜு வெளியிட்ட இன்னொரு பதிவில், நான் கருணாநிதியின் சொத்துக்கள் குறித்துத்தானே கேட்டேன். அதற்கு ஏன் தமிழர்கள் கோபப்படுகிறார்கள் என்று கேட்டிருந்தார்.

இந்தப் பதிவிலும் அவருக்கு கண்டன பின்னூட்டங்கள் குவிந்தன.

இதனால் விரக்தி அடைந்த கட்ஜு தற்போது இனிமேல் தமிழர்கள் குறித்துப் பேசப் போவதில்லை என்று புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதி – ஜெ குறித்து கட்ஜூவின் பதிவு

அதில், அவர் தெரிவித்துள்ளதாவது:

“தமிழர்கள் குறித்து நான் இதுவரை வெளியிட்ட அனைத்து பதிவுகளையும் எனது முகநூலிலிருந்து அழித்து விட்டேன். இன ரீதியான விவாதங்கள் தொடரக் கூடாது என்று நான் விரும்புகிறேன். எனது பதிவுக்கு வந்த நூற்றுக்கணக்கான விமர்சனங்களும் மிகவும் மோசமானவை,

ஒரே மாதிரி திரும்பத் திரும்ப விமர்சனம் செய்கிறார்கள். என்னை ஜாதி வெறி பிடித்தவனாக சித்தரிக்கிறார்கள். எனது வாழ்க்கை முழுவதும் ஜாதி, மதவாதத்திற்கு எதிராக பேசி, போராடி வந்தவன்.

நான் என்ன சொன்னேன் என்பதை விளக்கி விட்டேன். நான் சொன்னது தவறாகக் கூட இருக்கலாம். நான் தவறே செய்யாதவன் என்று ஒரு போதும் சொன்னதில்லை. நானும் தவறு செய்யக் கூடியவன்தான். ஆனால் என்னைப் பற்றிய விமர்சனங்கள் மோசமானவையாக இருக்கலாமா?

கட்ஜூவின் குட்பை பதிவு

தமிழர்களின் பல போராட்டங்களில் நான் அவர்களை ஆதரித்து வந்துள்ளேன். ஜல்லிக்கட்டுப் போராட்டம், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்குவது, நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் என நான் பல போராட்டங்களை ஆதரித்திருக்கிறேன்.

எல்லாவற்றையும் தமிழர்கள்  மறந்து விட்டார்கள். என் மீது மிகவும் மோசமான தாக்குதலைத் தொடுத்து விட்டனர். என்னை ஒரு பார்ப்பண சாத்தானாக சித்தரித்து விட்டனர். எனவே தமிழர்களே குட்பை.. உங்களது விசுவாசத்திற்கு நன்றி” என்று அந்த பதிவில் கட்ஜூ கூறியுள்ளார்.

 

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Goodbye to Tamils : Gadju, தமிழர்களே குட்பை!: கட்ஜூ அதிரடி முடிவு!
-=-