ஈரோடு: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து வழங்கும் பரிசு பொருட்களும், அங்கு நடைபெறும் சம்பவங்களும்,  இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது தொடர்பான பல வட இந்திய ஊடகங்களும் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதுதான், தமிழக அரசியல் கட்சிகளின் மாடல் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில், வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அளும் திமுக அரசு அரங்கேற்றி வரும் அராஜகங்கள் மற்றும் அவலங்களும், அவர்களுக்கு  ஈடுகொடுத்து, அதிமுகவினரும் களத்தில் உள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, எந்தவித வேலையும் இன்றி, பணமும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  இதனால், மக்கள் மகிழ்ச்சியாக, நேரத்திற்கு நேரம் சுடச்சுட பிரியா உள்பட உணவுப்பொருட்கள், தேவையானவர்களுக்கு டாஸ்மாக் பாட்டில்,  செலவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2ஆயிரம் பணம், மேலும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் என  ‘பரிசு மழை’ பொழிந்து வருவதால், தொகுதி முழுவதும் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் இன்று (சனிக்கிழமை) முடிவடையவுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர் உள்பட அரசியல் கட்சியினரும் இறுதிக்கட்ட, பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்கும் பணியுடம், தமிழக அமைச்சர்கள் குழுவே அங்கு முகாமிட்டு பணியாற்றி வருகிறது.  ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலை பாகம் வாரியாக பிரித்து, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் உள்ளன என்பது குறித்த விபரம் திமுக, அதிமுக  நிர்வாகிகள் கையிலும் உள்ளது.

அதன்மூலம் வாக்காளர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி பணப்பட்டுவாடா தீவிரம்: கடந்த இரு நாட்களாக பணம் மற்றும் பரிசுப் பொருள் பட்டுவாடா தீவிரமடைந்துள்ளது. திமுக சார்பில் ஒரு வாக்கிற்கு ரூ 3000, அதிமுக சார்பில் ஒரு வாக்கிற்கு ரூ.1000 என தொகுதி முழுவதும் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சியினரும் அவர்களை அழைத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் அடைத்து வைக்கின்றனர். மதியம் வரை தங்கியிருப்பவர்களுக்கு ₹ 500 வழங்கப்படும் என்றும், மாலையில் தொடர்ந்தால் ₹ 500 கூடுதலாக வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

மக்கள் தாங்கள் பெற்ற வேட்டி, சேலைகளை காட்டியுள்ளனர். இதுபோன்ற பரிசுகளை வழங்குவதில் திமுக, அதிமுக இரண்டும் போட்டி போடுகின்றன. இது பெரிய சவால். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புதிய ஃபார்முலாக்களின் தேர்வாக மாறியுள்ளது. வாக்காளர்களுக்கு இன்பப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,

பெண்களை கவர் அவர்களுக்கு குக்கர், ஹாட்பாக்ஸ், சேலை உள்பட தேவையான பொருட்கள்,  ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டு வாசலில் இறைச்சிப் பைகள் மற்றும் உணவுப்பொருட்கள்  விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  “இவையெல்லாம் புதியவை, அவர்கள் (திராவிடக் கட்சிகள்) மக்களைக் கவரவும், அவர்களின் வாக்குகளைப் பெறவும் இதையும்  செய்கிறார்கள்.  பண பலத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்களை ஏமாற்றுகிறார்கள்.” அவர்களின் பிரச்சாரத்தில், இடைத்தேர்தலுக்காக குறைந்தபட்சம் ₹ 300 கோடி செலவிடப்பட்டு இருக்கலாம் என  தெரிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக, ‘ ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் கேட்டபோது, ‘குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து,  அங்கு உடனே தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், அப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை.  யாரும் பரிசுப்பொருள் கொடுக்கவில்லை என்று வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தேர்தல் பறக்கும்படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர்’ என்றார் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பெய்துவரும் பணமழை மற்றும் பரிசுமழை குறித்து பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் ‘கடந்த 10 நாட்களாகவே, திமுகவினர் தொடர்ந்து வீட்டுக்கு வந்து வாக்குகளை சரிபார்த்து, எங்களுடன் நட்பாக உள்ளனர். மாலை நேரங்களில் அவர்களது கூடாரத்திற்கு சென்று சிலமணி நேரம் அமர்ந்திருந்தால் ரூ.1000 மற்றும் உணவு கொடுக்கிறார்கள். முழு நாள் இருந்தால் ரூ.2000 மற்றும் உணவு, டிபன் வழங்கப்படுகிறது. 

ஞாயிற்றுக்கிழமைகளில், பெரும்பாலான வீடுகளுக்கு ஆடு, கோழி, மீன் இறைச்சி வழங்கப்பட்டது. காதணி விழா என்ற பெயரில் வெவ்வேறு இடங்களில் பிரியாணி விருந்தும் கொடுக்கப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கென வாகன வசதியும் செய்து தரப்பட்டது. பல பகுதிகளில் வெற்றி கொலுசு, வெள்ளி டம்ளர் போனற்வை வழங்கப்பட்டன.  . கெடுபிடி அதிகமாக உள்ள பகுதிகளில், டோக்கன் வழங்கப்பட்டு, அவர்களுக்கு தனியாக பரிசுப்பொருட்கள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரு நாட்களாக வெள்ளி டம்ளர், ஸ்மார்ட் வாட்ச் போன்றவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகப் பொருட்களான, பால் குக்கர், தயிர் கடையும் ஜார், காய்கறி வெட்டும் இயந்திரம், லேப்டாப் பேக் உள்ளிட்டவையும் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட வாக்குகள் கொண்ட ஒரு கூட்டுக் குடும்பத்திற்கு, வாஷிங் மிஷின் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

இதோடு, வீடுகள் தோறும் ஒரு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நாளில், உங்களுக்கு ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது என்று டோக்கனை வழங்கிய திமுகவினர் தெரிவித்துள்ளனர். என்ன பரிசு கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிலபகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, மேட்டூர் அணை, ஏற்காடு, சென்னிமலை, கொடிவேரி அணை என பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

அதிமுகவினரைப் பொறுத்தவரை, அதிக அளவில் வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளது. 3 முதல் 5 வாக்குகள் உள்ள வீடுகளுக்கு வெள்ளிக் கொலுசு, சிறிய அகல் விளக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளியிலான சிறு டம்ளர் வழங்கப்பட்டது.

திமுக சார்பில் வழங்கப்பட்ட வெள்ளி டம்ளர் அளவில் பெரியதாக உள்ள நிலையில், அதிமுகவினர் வழங்கிய வெள்ளி டம்ளர் மிகச் சிறியதாக உள்ளது. அதிமுகவினர் வழங்கிய பரிசு, எதற்கும் பயன்படாது என்பது போல், திமுகவினர் தயாரித்துள்ள கலகலப்பான வீடியோவும் தொகுதியில் வைரலாகி வருகிறது.

போட்டியாளர்கள் தங்களை அணுகுவதைத் தடுக்க கொட்டகைகளில் ஆட்களை மேய்ப்பது, வாக்குகளுக்கு பணம், பிராண்டட் ஆடைகள், 1 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்ட கவர்ச்சிகரமான பரிசுகள், சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்தல் மற்றும் வார இறுதியில் புதிய இறைச்சியை வழங்குதல் ஆகியவை ‘புதிய ஃபார்முலாக்களின் ஒரு பகுதியாகும்.

நான்கு வாக்காளர்களைக் கொண்ட குடும்பத்திற்குப் பரிசுகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ₹ 10,000 அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

பல தரப்பிலிருந்து வரும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால். 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், புகார் வந்தவுடன் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்குகளுக்கு பரிசுகள், ரொக்கம் போன்ற குற்றச்சாட்டுகள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பேசிய, காங்கிரஸின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று மறுத்துள்ளார். “தோல்வி அடையும் கட்சிகள் எப்போதுமே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. மக்கள் ஆதரவு இல்லை என்பதை அவர்களால் ஒப்புக்கொள்ள முடியாது, அதுதான் தங்கள் தோல்விக்கு காரணம் என்று அவர்களால் ஒப்புக்கொள்ள முடியாது, மாறாக, அவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கொண்டு வருகிறார்கள், அதுதான் வழக்கமான நடைமுறை. நான் உறுதியாக நம்புகிறேன். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்,” என்றார்.

அதிமுகவை மட்டுமே மக்கள் நம்புவார்கள் என்றும் அவர்தான் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவார் என்றும் ஈரோடு தொகுதியில் 2 முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவரும் அதிமுக வேட்பாளருமான கே.எஸ்.தென்னரசு தெரிவித்துள்ளார். வாக்குகளைப் பெற திமுக-காங்கிரஸ் கூட்டணி சந்தேகத்திற்குரிய வழிகளைக் கையாண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து கூறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  மேனகா,  திராவிட கட்சியினர் மக்களை திசை திருப்புகின்றனர். அவர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. வாக்காளர்களைக் கண்டறிவது மிகவும் கடினம். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சியினரும் அவர்களை அழைத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் நிறுத்துகின்றனர். மதியம் வரை தங்கியிருப்பவர்களுக்கு ₹ 1000 வழங்கப்படும் என்றும், மாலையில் தொடர்ந்தால் ₹ 20000 கூடுதலாக வழங்கப்படும் என கூறி அழைத்துச் செல்கின்றனர்  என்று குற்றம் சாட்டினார்.

யார் கதவைத்தட்டினாலும், இன்று என்ன பரிசு கிடைக்கப் போகிறதோ என்று எதிர்பார்ப்புடன் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் ஆவலோடு காத்திருக்கும்  நிலை உள்ளது’  திராவிட மாடல் என கூறும் இரு கட்சிகளும், இலவசங்களை வாரியிறைத்து, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற முயற்சிக்கின்றன என்பதே உண்மை நிலவரமாக உள்ளது.