சென்னை:
குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் , டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேரை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் குட்கா எனப்படும் புகையிலைப் பொருட்களை விற்க அரசு தடை செய்துள்ளது. ஆயினும் குட்கா விற்பனை அனைத்து கடைகளிலும் தடை இன்றி நடந்துவருவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து வருமானவரித் துறை அதிகரிகள் ரெட்ஹில்ஸ் பகுதியில் நடத்திய சோதனையில் ஒரு டைரி சிக்கியது.

இதில் அமைச்சர்கள், காவல்துறையின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி, உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு லஞ்சம் அளித்ததாக பதியப்பட்டிருந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த தகவலை காவல்துறை இயக்குனர் அசோக்குமாருக்கு தெரிவித்தனர். அவர் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு இது குறித்து கடிதம் எழுதினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் இல்லத்தில் சசிகலா அறையில் நடந்த சோதனையில் இந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. ஆகவே ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்படவில்லை என புகார்கள் எழுந்தன. திமுக சார்பில் இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.

அதை ஒட்டி நேற்று முன்தினம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் சிபிஐ யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அதில், பெயர் தெரியாத கலால்துறை அதிகாரிகள், பெயர் தெரியாத உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், பெயர் தெரியாத அரசு ஊழியர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குட்கா ஊழல் விசாரணைக்கு சிபிஐ அதிகாரியான சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் , டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேரை விசாரிக்க தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.